உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றாத தமிழக போலீசு – பக்தர்களில் கடும் அதிருப்தி
மதுரை உயர்நீதிமன்ற கிளை தெளிவாக உத்தரவிட்டிருந்தபோதும், திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றப்படாததால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மனவேதனையில் ஆழ்ந்தனர். இதனை எதிர்த்து இந்து முன்னணி அமைப்பினர்கள் கோயில் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடாக விளங்கும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருத்தலத்தின் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை நேர்த்தியான உத்தரவு பிறப்பித்தது. அதனை முன்னிட்டு, கார்த்திகை தீபத்திருநாள் அன்று காலை முதலே பக்தர்கள், இந்து அமைப்பினர்கள் எதிர்பார்ப்புடன் மலைப்பகுதியில் காத்துக்கொண்டிருந்தனர்.
ஆனால் நேரம் மணி மணியாக நகர்ந்தும், கோயில் நிர்வாகத்தினரும், அறநிலையத்துறை அதிகாரிகளும் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளவில்லை. மாலை 6 மணிக்கு வழக்கம்போல் இந்த ஆண்டும் உச்சி பிள்ளையார் கோயில் அருகில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டதால், மக்கள் கடும் ஏமாற்றத்துடன் இருந்தனர்.
நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை என்பதைக் கண்டித்த இந்து அமைப்பினர், கோயில் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். இதன் போது, பக்தர்கள் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு நிலை ஏற்பட்டது.