வொண்டர்லாவில் பயணிகள் அச்சத்தில் – செயலிழந்த ரைடுகள் பாதுகாப்பு சிக்கலை வெளிக்கொணர்கின்றன
சென்னை அருகிலுள்ள செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில், ₹611 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்ட வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா கடந்த 2ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் திறப்பு நாளிலேயே பல ரைடுகள் செயலிழந்ததால் பார்வையாளர்கள் பெரும் ஏமாற்றத்துடன் மட்டுமில்லாமல் அச்சத்திலும் ஆழ்ந்தனர்.
இந்தியாவின் முன்னணி அமுச்மெண்ட் பார்குகளின் வரிசையில் திகழும் வொண்டர்லா, கொச்சி, பெங்களுரு, ஐதராபாத், புவனேஷ்வருக்கு பின் தன்னுடைய புதிய பூங்காவை தமிழ்நாட்டில் துவக்கியுள்ளது. 64 ஏக்கரில் அமைக்கப்பட்ட இந்த பூங்காவில் உலகத் தரத்திலான 43 ரைடுகள் உள்ளதாக நிறுவனம் தெரிவித்திருந்தது. தலைகீழாக தொங்கும் தஞ்சோரா ரோலர் கோஸ்டர், நாட்டின் மிக உயரமான ஸ்பின் மில், 3D அனுபவம் தரும் ஸ்கை ரயில் என பல முக்கிய ரைடுகள் முக்கிய அம்சங்களாக அறிவிக்கப்பட்டன.
ஆனால், திறப்பு நாளிலேயே பல ஸ்வாரஸ்ய ரைடுகள் பாதியிலே நின்று செயல்பாட்டை இழந்தன. உயரத்தில் இருந்தபோதே நின்ற ரைடுகள் பயணிகளை பதறச் செய்தன. இதனால் பயணிகள், அங்கிருந்த ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த எதிர்பாராத கோளாறுகள் காரணமாக, “அவசரமாக, முழுமையான ஆய்வு இல்லாமல் பூங்கா திறக்கப்பட்டதா?” என்ற கேள்விகள் பொதுமக்களில் எழத் தொடங்கின. அடிப்படை இயந்திரப் பாதுகாப்பு கூட சரியாக சோதிக்கப்படாதது போல இருக்கிறது என மக்கள் சந்தேகம் தெரிவித்தனர்.
இன்னும் சில ரைடுகளின் கட்டுமானப் பணிகள் கூட நிறைவடையாத நிலையில், சரியான தொழில்நுட்ப பரிசோதனைகளின்றி திறப்பு விழா நடைபெற்றது ஏன் என்ற கேள்வியும் வலுவாக முன்வைக்கப்படுகிறது.
தொடர்ந்து, இந்த கோளாறுகள் மின் தடையால் ஏற்பட்டவையே எனவும், ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், வொண்டர்லா நிறுவனத் தலைவர் அருண் சிட்டிலப்பிள்ளை விளக்கம் அளித்தார்.
ஆனால், “புதிய அனுபவத்தை” தருவதாக எதிர்பார்த்த பயணிகளுக்கு, இந்த நிகழ்வுகள் நேரடியாக உயிர் அச்சத்தை ஏற்படுத்தியவையே. உலகத் தரம், பிரம்மாண்டம் போன்ற வார்த்தைகளை விட பொதுமக்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதை வொண்டர்லா நினைவில் கொள்ள வேண்டிய அவசியம் பெரிதாகியுள்ளது. இல்லையெனில் பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்ட இந்த பூங்கா, மக்களின் உயிரை ஆபத்துக்குள்ளாக்கும் இடமாக மாறிவிடும் என்ற எச்சரிக்கையும் எழுந்துள்ளது.