சின்மயி ஏன் வருத்தம் தெரிவித்தார்? – விளக்கம் கேட்ட இயக்குநர் மோகன் ஜி
‘திரௌபதி 2’ திரைப்படத்தில் பாடியதற்காக பாடகி சின்மயி வருத்தம் தெரிவித்த நிலையில், அந்த வருத்தத்தின் காரணம் என்ன என்பதைத் தெரிவித்திட வேண்டும் என்று படத்தின் இயக்குநர் மோகன் ஜி வீடியோவொன்றை வெளியிட்டுள்ளார்.
மோகன் ஜி இயக்கும் ‘திரௌபதி 2’ திரைப்படத்தின் வெளியீட்டு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் முதல் பாடல் ‘எம்கோனே’ எனும் பாடலை சின்மயி பாடி உள்ளார். இந்த பாடலின் புரமோ சமீபத்தில் வெளியாகி, சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஆனால் புரமோ வெளிவந்த சில மணி நேரங்களிலேயே சின்மயியின் பல ரசிகர்கள்,
பெண்களின் உரிமைகள், பெண்களுக்கு எதிரான அநீதி போன்றவற்றை கண்டனம் செய்பவரான சின்மயி, பெண்களுக்கு எதிரான சுயசாதி கருத்துகள் கொண்ட இயக்குநர் மோகன் ஜி-யின் படத்தில் எப்படி பாடினார்? என்ற கேள்வியுடன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்த விமர்சனங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, ‘திரௌபதி 2’ படத்திற்காக பாடியது குறித்து வருத்தம் உள்ளதாக சின்மயி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
இதனைக் தொடர்ந்து இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் கணக்கில் வெளியிட்ட வீடியோவில்,
சின்மயி இந்தப் பாடலைப்பற்றிக் கவலையடைந்ததற்கான காரணத்தை தெளிவுபடுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும், சின்மயியின் பதிவு திரைப்படத்தின் தொழில்துறை மதிப்பை பாதிக்கும் சூழ்நிலை உருவாகக் கூடாததால், அவர் நேரடியான விளக்கம் அளிப்பது அவசியம் எனவும் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.