தமிழ் கற்க வாரணாசி மாணவர்கள் தமிழகம் வர உள்ளனர் – காசி தமிழ் சங்கமம் 4.0 தொடக்கம்
தமிழகத்துக்கும் காசிக்கும் இடையே உள்ள பண்டைய பண்பாட்டு உறவை வலுப்படுத்தும் வகையில், காசி தமிழ் சங்கமம் 4.0 விழா வாரணாசியில் சிறப்பாக தொடங்கியுள்ளது. இவ்வாண்டு விழாவின் கருப்பொருள் “தமிழ் கற்கலாம்” என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் சென்னை IIT இணைந்து நடத்தும் இந்நிகழ்வின் முதல் கட்டமாக, தமிழ்நாட்டிலிருந்து ஏழு குழுக்கள் காசிக்கு சென்று அங்குள்ள பண்பாட்டு தளங்களைப் பார்வையிடவுள்ளனர்.
இரண்டாம் கட்டமாக, டிசம்பர் 15 முதல் 31 வரை, வாரணாசியில் இருந்து 300 மாணவர்கள் தமிழகம் வரவழைக்கப்படுகிறார்கள். அவர்கள் தமிழ் பண்பாடு, மரபு மற்றும் மொழியை அறிந்து கொள்வதுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி நிலையங்களில் தமிழ் கற்றுக்கொள்ள உள்ளனர்.
மேலும், தமிழ்நாட்டில் இருந்து 50 ஆசிரியர்கள் உத்தரப்பிரதேசத்திற்கு அனுப்பப்பட்டு, அங்குள்ள 50 பள்ளிகளில் சுமார் 1500 மாணவர்களுக்கு பேச்சுத் தமிழை கற்பிக்க இருக்கின்றனர்.
ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் காசி தமிழ் சங்கமம், இரண்டு மாநிலங்களுக்கிடையிலான வரலாற்று உறவை புதுப்பிக்கும் முயற்சியாக அமைந்து, மாணவர்கள், ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் மத்திய அரசின் முழுச் செலவில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.
இந்த நிகழ்வுகள் மூலம் தமிழையும் காசி கலாச்சாரத்தையும் இணைக்கும் பண்பாட்டு பரிமாற்றம் மேம்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.