சென்னை கோயம்பேடு–பூந்தமல்லி சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீர்: வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
சென்னை: கோயம்பேடு மற்றும் பூந்தமல்லி பகுதிகளில் தொடர்ச்சியான கனமழையால் சாலைகளில் குளம்போல் தண்ணீர் தேங்கி, வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
கோயம்பேடு நெற்குன்றம் பட்டேல் சாலையில் மழைநீர் வடிகால் இல்லாததால், நீர் குளம்போலே தேங்கி நிற்கிறது. தண்ணீரின் ஆழம் தெரியாததால், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் இயங்க முடியாமல் அவதி அடைந்தனர். சிலர் நீர் நிலையை கணிக்காமல் சிக்குபடும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
பூந்தமல்லி பகுதியில் நிலை இன்னும் மோசமாக உள்ளது. பேருந்து நிலையம் எதிரே உள்ள டிரங்க் சாலை கனமழை காரணமாக கடுமையாக சேதமடைந்துள்ளது. சாலையில் தேங்கியுள்ள தண்ணீரால் எங்கு குழி உள்ளது என்பது பொதுமக்களுக்கு தெளிவாக தெரியாத நிலை. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்து அபாயத்தை சந்தித்து வருகின்றனர்.
இதில் மேலும் சிக்கலாக, மெட்ரோ ரயில் பணிகளுக்காக வரவழைக்கப்பட்ட ஜே.சி.பி மற்றும் பிற கனரக வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ளன. இடம் குறைவாக உள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளம் நினைக்க முடியாமல் சாலையில் சறுக்கி விழும் அபாயம் அதிகரித்துள்ளது.
மழை அதிகரிக்கும் நிலையில், இந்த பகுதிகளில் உடனடி சாலை சீரமைப்பு மற்றும் மழைநீர் வடிகால் ஏற்பாடுகள் செய்ய வேண்டியது கட்டாயம் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.