இனி உங்கள் மொபைலில் Sanchar Saathi செயலி அவசியம் என வந்த செய்திக்கு விளக்கம்
இந்தியாவில் தயாரிக்கப்படும் அல்லது வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் அனைத்து புதிய ஸ்மார்ட்போன்களிலும், மத்திய அரசு அறிமுகப்படுத்திய பாதுகாப்பு செயலியான Sanchar Saathi‐யை முன்கூட்டியே நிறுவுவது கட்டாயம் என சமூக வலைத்தளங்களில் பரவிய செய்திகளுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்த செயலியை பதிவிறக்க வேண்டிய முக்கியத்துவம் என்ன என்பதை விளக்கும் செய்தி இது.
2023 மே மாதத்தில், தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மத்திய தொலைத்தொடர்பு துறை Sanchar Saathi இணையதளத்தை அறிமுகப்படுத்தியது. அதன் பயன்பாடு அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்த வருடம் ஜனவரி 17ஆம் தேதி அதே பெயரில் மொபைல் செயலியும் வெளியிடப்பட்டது.
இந்த செயலி, பயனர்கள் தங்களின் மொபைல் அடையாளத்தை பாதுகாக்கவும், சைபர் குற்றச்செயல்களைத் தடுக்கவும் உதவுகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் iOS இரண்டிலும் கிடைக்கும் இந்த செயலியில் KYM (Know Your Mobile) எனும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.
ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 21 இந்திய மொழிகளில் செயல்படும் Sanchar Saathi செயலி, கூகுள் ப்ளே ஸ்டோரில் 1 கோடியே அதிகமான பதிவிறக்கங்களையும், ஆப்பிள் ஸ்டோரில் 9.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பதிவிறக்கங்களையும் பெற்றுள்ளது. 16.7 கோடிக்கும் மேற்பட்டோர் அதன் இணையதளத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.
திருடப்பட்ட அல்லது காணாமல் போன 26 லட்சத்திற்கும் மேற்பட்ட மொபைல் போன்களை மீட்கவும், புகாரின் அடிப்படையில் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட போலி அல்லது தவறான மொபைல் இணைப்புகளை துண்டிக்கவும் இந்த செயலி உதவியுள்ளது.
இதில் உள்ள “Chakshu” என்ற அம்சம் தீங்கு விளைவிக்கும் லிங்குகள், மோசடி நெருப்பு, சரிபார்க்கப்படாத APK கோப்புகள் போன்ற சைபர் அச்சுறுத்தல்களைத் தடுக்கிறது.
SMS, RCS, iMessage, WhatsApp, Telegram போன்ற பயன்பாடுகள் வழியாக வரும் ஸ்பேம் செய்திகளையும் இது தடுக்கும் திறன் கொண்டது. இந்த அம்சத்தின் மூலம், சுமார் 42.14 லட்சத்திற்கும் மேற்பட்ட மோசடியில் பயன்படுத்தப்பட்ட மொபைல் எண்கள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.
நிதி தொடர்பான மோசடிகளைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களையும் இந்த செயலி வழங்குகிறது. மேலும், பயனர் தனது பெயரில் செயல்படும் அனைத்து மொபைல் எண்களையும் சரிபார்த்து, பயன்படுத்தப்படாத எண்களை ரத்து செய்ய கோரிக்கையிடும் வசதியும் இதில் உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் புதிய மொபைல் போன்களில் அடுத்த 90 நாட்களுக்குள் இந்த செயலியை முன்பே நிறுவ வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவு, எதிர்க்கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இந்த செயலியை நீக்க முடியாத வகையில் கட்டாயப்படுத்துவது அரசியலமைப்பு மீறல் என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதற்கிடையில், நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகப்பிரதிநிதிகளை சந்தித்த மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா,
“Sanchar Saathi செயலியை பயன்படுத்துவது விருப்பம் மட்டுமே; இது கட்டாயமல்ல. இந்த செயலி எந்தவித உளவு பார்ப்பதையோ, அழைப்புகளை கண்காணிப்பதையோ செய்யாது” என்று தெளிவுபடுத்தினார்.
உலகளவில் எந்த நாட்டிலும் இத்தகைய கட்டாய விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என Apple நிறுவனம் அரசிடம் கருத்து தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. Samsung உள்ளிட்ட பிற நிறுவனங்கள் இந்த உத்தரவினைப் பற்றி பரிசீலித்து வருகின்றன.