கரூர் துயரம்: நீதிபதியை விமர்சித்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரிக்கு ஜாமீன் மறுப்பு
கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியை சமூக வலைதளத்தில் விமர்சித்ததாக கைது செய்யப்பட்ட ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி வரதராஜனுக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துள்ளது.
செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தவெக. தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அந்தச் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதியை குறிவைத்து, அவதூறு கருத்துகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக, ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி வரதராஜனுக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து அக்டோபர் 7ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். பின்னர், அரசியல் உள்நோக்கத்துடன் தான் கைது செய்யப்பட்டதாகக் கூறி, வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணங்களால் ஜாமீன் வழங்குமாறு அவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவுக்கு பதிலளித்த காவல்துறை தரப்பு, “கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் நீதித்துறை மற்றும் அரசியல் தலைவர்களை குறிவைத்து அவதூறு கருத்துகள் பதிவு செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சூழலில் ஜாமீன் வழங்கக் கூடாது,” என்று வலியுறுத்தியது.
இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ். கார்த்திகேயன், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.