கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சிலர் மயக்கம் – பக்தர்கள் மத்தியில் பரபரப்பு!
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தெய்வ தரிசனம் செய்தனர். உலகின் ஆரம்ப கால ஸ்தலமாகக் கருதப்படும் இந்த ஆலயம், பிரசித்திபெற்ற மகாமகம் திருவிழா நடைபெறும் முக்கியத் தலமாக இருந்துவருகிறது.
இந்த சிறப்பு வாய்ந்த கோயிலில், கடந்த 27ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேகத்திற்கான ஆன்மிக நிகழ்வுகள் தொடங்கின. எட்டுக்கால பூஜை நிறைவடைந்தபின், சிவாச்சாரியார்கள் புனித பொருட்களைத் தலையில் ஏந்தி ஆலயத்தைச் சுற்றி வந்தனர்.
பின்னர், விமான கோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுர கலசங்கள் மீது புனித நீர் அர்த்தனையுடன் ஊற்றி, கும்பாபிஷேக விழா மிகுந்த கொலாகலத்துடன் நடைபெற்றது.
அமைச்சர்கள் சேகர்பாபு, கோவி செழியன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றதோடு, பொதுமக்களும் பெருமளவில் திரளாக வந்தனர்.
ஆனால், நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தவேளையில் சில பக்தர்கள் மயக்கமடைந்ததால் அங்கு திடீர் கலக்கம் ஏற்பட்டது. மயக்கமடைந்த வயதான ஒருவரும், ஒரு பெண்ணும் கோயில் பணியாளர்களின் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த நிகழ்வில் மருத்துவ முகாம் ஏன் அமைக்கப்படவில்லை என செய்தியாளர்கள் கேட்டபோது, “எதிர்பாராத சூழ்நிலை” என்று தளர்வான பதில் அளித்துவிட்டு அமைச்சர் சேகர்பாபு சென்றுவிட்டார்.
பின்னர் ஊடகங்களிடம் பேசிய இந்து மகா சபை நிர்வாகி நிரஞ்சன், கும்பாபிஷேகத்திற்கான அனுமதி சீட்டுகள் வழங்கும் முறையில் குழப்பம் ஏற்பட்டதாகவும், பெருமளவில் விஐபி பாஸ்கள் பகிரப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.
மூத்த குடிமக்கள், ஆன்மீகத் தலைவர்கள் உள்ளிட்டோர் எளிதில் கலந்து கொள்ள அறநிலையத் துறை முன்கூட்டியே சிறப்பான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், எந்தக் கும்பாபிஷேக விழாவாக இருந்தாலும், அந்த இடத்தில் தீயணைப்பு சேவை, மருத்துவ உதவி மையம், தற்காலிக கழிவறை வசதி போன்ற அடிப்படை அம்சங்களை அரசு கட்டாயம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.