“தமிழகத்தின் கள யதார்த்தம் முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாது” – கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு, கிராமப்புற மக்களின் உண்மை நிலைமை பற்றிய கள யதார்த்தம் தெரியாமல் உள்ளது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் மக்கள் வசிக்கும் கிராமங்களில் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து வரும் அவர், திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“புதிய தமிழகம் கட்சியின் 7-வது மாநில மாநாடு வரும் ஜனவரி 7-ம் தேதி மதுரையில் நடைபெறும். கடந்த ஆறு மாதங்களாக தென் மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் மக்களின் வாழ்நிலை குறித்து நேரடி ஆய்வு மேற்கொண்டு வருகிறேன்.
பல கிராமங்களில் பொதுக் கழிப்பிடம், வீட்டு கழிப்பிடம் ஆகிய வசதிகள் இன்னும் இல்லை. தாழ்த்தப்பட்ட சமூகங்கள் வசிக்கும் பகுதிகளில் சாலை வசதி வழங்கப்படாத நிலை தொடர்கிறது. ஊராட்சி தலைவர்களில் சிலர் இன்றும் சாதி பாகுபாட்டை கடைப்பிடித்து வருகிறார்கள்.
மோதல்கள் நடந்த கிராமங்களுக்கு பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல நடந்து செல்லும் நிலை உள்ளது. நான்கரை ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திமுக அரசு, தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்கத் தவறியுள்ளது. இதை எதிர்த்து நவம்பர் 20-ம் தேதி திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,” என்றார்.
மேலும் அவர் தொடர்ந்தும் கூறியதாவது:
“அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்களுக்கு வேலை வாய்ப்பு குறைவு உள்ளது. இதனால் சிலர் தவறான வழிக்குச் செல்கின்றனர். இதை அரசு சரிசெய்யாவிட்டால், அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதன் விளைவை ஆளும் கட்சி அனுபவிக்க வேண்டி வரும்.
பசியுடன் இருந்தாலும் வாக்குக்கு பணம் வாங்க வேண்டாம் என்பதில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அடுத்த தேர்தலுக்குப் பிறகு பாகுபாடற்ற, மக்களின் நலனைக் கவனிக்கும் அரசு அமைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
தற்போது தமிழக அரசு விளம்பரத்திலும் வெற்று அறிக்கையிலும் மட்டுமே இயங்குகிறது. கள யதார்த்தத்தை முதல்வரிடம் கூற யாரும் முன்வரவில்லை. இதனால் அவர் உண்மையான நிலைமையை அறியாமல் உள்ளார். மனு நீதி நாள் என்பது வெறும் சம்பிரதாய நிகழ்வாக மாறியுள்ளது. அதிகாரிகள் கிராமங்களுக்கு நேரடியாக சென்று மக்களின் பிரச்சனைகளை கேட்டு தீர்வு காண வேண்டும்,” என தெரிவித்தார்.
அதே நேரத்தில் கூட்டணி அரசியல் தொடர்பான முடிவு ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்படும் என்றும் கிருஷ்ணசாமி கூறினார்