தஞ்சை அருகே குடியிருப்புகளை முற்றுகையிட்ட வெள்ளநீர் – மக்கள் அவல நிலை
டிட்வா புயல் தாக்கத்தால் தஞ்சை மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் விளைவாக மாரியம்மன் கோயில் அருகே உள்ள சுந்தரம் மீனா நகரில் கடந்த இரண்டு நாட்களாக 100-க்கும் மேற்பட்ட வீடுகள் மழைநீரால் சூழப்பட்டு, பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
வீடுகளுக்குள் ஊறிய மழைநீரால் இருசக்கர வாகனங்கள் மற்றும் மின்சாதனங்கள் சேதமடைந்துள்ளதாகவும், விஷப்பாம்புகள் மற்றும் பிற ஆபத்தான உயிரினங்கள் வீட்டிற்குள் நுழையும் அபாயம் இருப்பதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக மழை பெய்தாலே இதே பிரச்சினை உருவாகி வருவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிலையைத் தீர்க்க, தங்கள் பகுதியில் சரியான வடிகால் வசதி அமைக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியிருப்போர் வலியுறுத்தி உள்ளனர்.