போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் பணப்பலன் — பொங்கலுக்கு முன் வழங்கப்படும்: அமைச்சர் உறுதி
போக்குவரத்துத் துறை அமைச்சரின் உறுதியைத் தொடர்ந்து, 62 நாட்களாக நடைபெற்ற போக்குவரத்து ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள பணப்பலன்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் மற்றும் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் ஆகஸ்ட் 18 முதல் மாநிலம் முழுவதும் 22 மையங்களில் தொடர் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், தொழிற்சங்க நிர்வாகிகள் அ. சவுந்தரராசன், கே. ஆறுமுக நயினார் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதில்,
- ஓய்வுபெற்றோரின் 17 மாத ஓய்வுகாலப் பலன்கள் 2 தவணைகளில் பொங்கலுக்கு முன் வழங்கப்படும்,
- 15வது ஊதிய ஒப்பந்த நிலுவைத் தொகையின் முதல் தவணை விரைவில் வழங்கப்படும்
என அமைச்சர் உறுதி அளித்தார்.
இதையடுத்து 62 நாள் நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது.
தொழிற்சங்க தலைவரான அ. சவுந்தரராசன், “மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற பொறுப்புணர்ச்சியோடு போராட்டத்தை முடித்துள்ளோம். சில சங்கங்கள் அரசியல் காரணங்களால் பங்கேற்கவில்லை என்றாலும், மனப்பூர்வ ஆதரவு தெரிவித்தன” என தெரிவித்தார்.