கர்நாடகாவில் பைக் டாக்சிகள் சட்டப்படி செல்லாது : மாநில அரசின் புதிய அறிக்கை!
கர்நாடக அரசின் சமீபத்திய அறிக்கையில், மாநிலத்தில் இயங்கி வரும் பைக் டாக்சி சேவைகள் சட்டத்துக்கு புறம்பானவை என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பைக் டாக்ஸியை நம்பி வாழ்ந்து வந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வருவாய் தடுமாறும் சூழல் உருவாகியுள்ளது.
பெங்களூருவில் பைக் டாக்சி பயணிகளாகச் சென்ற பெண்களுக்கு, ஓட்டுநர்களிடமிருந்து பாலியல் தொல்லை ஏற்பட்டதாக முன்பு பல புகார்கள் எழுந்தன. இதன்பின் அரசு தற்காலிகமாக பைக் டாக்சி சேவையைத் தடை செய்தது. பின்னர் சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து, பைக் டாக்சி தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குமாறு கர்நாடக உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது. இதன் பேரில் போக்குவரத்து, சாலை பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளின் 11 உயரதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு, பிற மாநிலங்களில் பைக் டாக்சி செயல்பாட்டு விதிமுறைகளை ஆய்வு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதில்,
- இருசக்கர வாகனங்களை வணிக சேவைக்காக பயன்படுத்த முடியாது
- பைக் டாக்சிகளுக்கு அனுமதி வழங்குவது மோட்டார் வாகனச் சட்ட மீறல்
- பைக் டாக்சிகள் பாதுகாப்பு தரநிலைகளை பூர்த்தி செய்யாதவை
- எனவே அவை சட்டவிரோதமானவை
என்று விளக்கப்பட்டுள்ளது.
இந்த அரசின் நிலைப்பாட்டால், பைக் டாக்ஸியை தொழிலாக கொண்டு குடும்பத்தை நடத்தி வந்த பலருக்கு பெரும் சிரமம் உருவாகியுள்ளது.