“நானும் டெல்டா பகுதியைச் சேர்ந்தவன்” என்ற பெயரில் வெறும் விளம்பர பேச்சுகளையே கூறி வரும் முதலமைச்சர் ஸ்டாலினை கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியுள்ளார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.
திமுக ஆட்சியில் விவசாயிகள் கண்கலங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
சிதம்பரம் அருகிலுள்ள பூவாலை மேற்கு பகுதி, அண்மைய கனமழையால் பெரும் பாதிப்புக்குள்ளாகி, சுமார் 750 ஏக்கர் நிலத்தில் நெல் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்தது கவலைக்குரியது என்று அவர் குறிப்பிட்டார்.
இப்பகுதி மக்களின் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பரவனாறு–அருவாமுக்கு திட்டத்தை நான்கு வருடங்கள் செயல்படுத்தாமல் வைத்திருந்த திமுக அரசு, சமீபத்தில் வேலைகளை ஆரம்பித்தாலும், ஆற்றை முழுமையாகத் தூய்மைப்படுத்தாமல், தடுப்புச் சுவர்கள் அமைக்காமல் அலட்சியமாக நடந்துகொண்டதே மீண்டும் மிகை மழையால் ஏற்பட்ட வெள்ளத்துக்குக் காரணம் எனவும் அவர் கூறினார்.
ஆட்சிக்கு வந்த நாள் முதல் நெற்பயிர்கள் வெள்ளத்தில் சிதைந்து, விவசாயிகள் துயரத்தில் ஆழும் சூழலை உருவாக்கியதற்கான முழுப் பொறுப்பையும் திமுக அரசு ஏற்க வேண்டியது அவசியம் என நயினார் நாகேந்திரன் சுட்டிக்காட்டினார்.
தேர்தல் நெருங்கும் காலத்தில் “நானும் டெல்டாகாரன்” என்ற சுலோகத்தை மீண்டும் மீண்டும் கூறி வருகிற முதல்வர் ஸ்டாலின், விவசாயிகளை ஏமாற்றும் போக்கை நிறுத்தி, சேதமடைந்த வயல்களை உடனடியாக ஆய்வு செய்து, ஏக்கருக்கு ரூ.50,000 இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.