தங்கம், வெள்ளி, பித்தளை போன்ற உலோகங்களில் விளக்குகள் இருந்தாலும், களிமண்ணால் வடிவமைக்கப்பட்ட அகல் விளக்குகளுக்கு கார்த்திகை மாதத்தில் தனிப்பட்ட முக்கியத்துவம் உண்டு. தீபத் திருவிழா நெருங்கி வரும் நிலையில், அகல் விளக்குகள் உற்பத்தியில் முழு ஈடுபாட்டுடன் செயல்படும் மண்பாண்ட தொழிலாளர்கள், அரசிடம் பல கோரிக்கைகள் வைத்து பதில் வரக் காத்திருக்கிறார்கள். இதுகுறித்த தொகுப்பை பார்ப்போம்.
இந்த ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி நாடு முழுவதும் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை களிமண் விளக்குகளின் உற்பத்தி அதிகரிக்கும் காலமாகும்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கஞ்சநாய்க்கன்பட்டி பகுதிகளில் தயாரிக்கும் அகல் விளக்குகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மொத்த வியாபாரிகளுக்கு ஆர்டர் அடிப்படையில் அனுப்பப்படுகின்றன. 50 மில்லி முதல் 250 மில்லி வரை எண்ணெய் நிரப்பக்கூடிய திறன் கொண்ட பல அளவுகளில் விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன.
அத்துடன், ஒருமுகம், ஐந்துமுகம் உள்ளிட்ட பல வடிவங்களில் அகல் விளக்குகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு வடிவத்திற்கும் தனி விலை நிர்ணயம் செய்யப்படுகிறதாலும், பண்டிகைக் காலங்களில் விலை சரிவர கிடைக்காமல் போகிறது; இதனால் நட்டமே ஏற்படுகிறது என தொழிலாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
வட மாநிலங்களில் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் உள்ளிட்ட பொருட்களால் தயாரிக்கும் அலங்கார விளக்குகள், மண் விளக்குகளின் விலைக்கே சந்தையில் விற்பனை செய்யப்படுவதால் போட்டி மேலும் கடுமையாகியுள்ளது. மேலும் கடந்த சில மாதங்களாக பெய்து வரும் மழையால், களிமண் கிடைக்காமல், அதை வாங்கவேண்டிய சூழ்நிலைக்கு தொழிலாளர்கள் ஆளாகியிருக்கின்றனர்.
நலவாரியத்தில் பதிவுசெய்துள்ள 11,500 பேரில், வெறும் 7,000 பேருக்கு மட்டுமே இந்த ஆண்டுக்கான மழைக்கால நிவாரணம் வழங்கப்பட்டதாகவும், மீதமுள்ளவர்களுக்கு காரணம் காட்டி நிவாரணம் வழங்கப்படவில்லை எனவும் தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
கார்த்திகை தீபத் திருவிழா அருகே வருவதால், தங்களது கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதே மண்பாண்ட தொழிலாளர்களின் ஒருமித்த கோரிக்கை. தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு எந்த நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற ஆவலான எதிர்பார்ப்பில் அவர்கள் காத்திருக்கின்றனர்.