நாட்டின் பல பகுதிகளுக்கு மின்சாரம் கொண்டு செல்ல உழைத்தவர்களே, தங்களுக்குக் கூட மின்சாரம் இல்லாமல் நாற்பது ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விசித்திரமான துயரம் நீலகிரி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.
உதகை மலையடிவாரத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பக எல்லையில், மசினகுடி கிராமத்தின் லேபர் கேம்ப் பகுதியில் சுமார் 35 குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களின் வாழ்க்கை பின்னணி மிகக் கடுமையானது — சிங்காரா நீர்மின் நிலைய கட்டுமானப் பணிக்காக ஒப்பந்த அடிப்படையில் வேலைக்குக் கொண்டுவரப்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களே இவர்கள்.
பணிக்காலத்துக்கு தற்காலிகமாக அமைக்கப்பட்ட குடியிருப்புகளில் தங்கி வேலை செய்த இவர்கள், பணி முடிந்ததும் செல்ல இடமின்றி அதே கேம்பிலேயே குடியேறி விட்டனர். இந்த தற்காலிக குடியிருப்புகளே மூன்று தலைமுறைகளாக இவர்களின் “உறைவிடம்” ஆனது.
ஆனால், இந்த 35 குடும்பங்களில் 80-க்கும் மேற்பட்டோர் 40 ஆண்டுகளாக மின்சார வசதி இன்றியே வாழ்ந்து வருவது நம்ப முடியாத ஒரு உண்மை!
நீர் மின் நிலையத்துக்காக உழைத்த இவர்களுக்கு, ஆதார், ரேஷன் கார்டு போன்றவை இங்கு வழங்கப்பட்டாலும், மின்சாரம் மட்டும் கிடைக்கவில்லை.
மேலும், தகரத்தால் செய்யப்பட்ட பாதுகாப்பற்ற வீடுகளில், வன விலங்குகளின் அச்சுறுத்தலுடன் கூடிய வாழ்வு இவர்களை நாள்தோறும் சிரமப்படுத்துகிறது.
இரவு நேரங்களில் மாணவர்கள் தெருவிளக்கின் கீழ், மொபைல் லைட் வெளிச்சத்தில், அல்லது மண்ணெண்ணெய் விளக்கு ஒளியில் படிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சில சமயங்களில் மண்ணெண்ணெய் கூடக் கிடைக்காமல் முழுக் இருளிலே பயத்தில் இரவுகளை கழிக்க வேண்டிய சூழல்.
வீடு, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளைப் பெற நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏ. என யாரிடமும் மனு விடாமல் இருந்தபோது கூட எந்த மாற்றமும் வரவில்லை என மக்கள் ஏமாற்றத்துடன் கூறுகின்றனர்.
இருண்ட வனப்பகுதியில் 40 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் தவிக்கும், நீர்மின் நிலையத்திற்காகவே பணியமர்த்தப்பட்ட குடும்பங்கள் இன்று மனிதாபிமானத்திற்கே கேள்விக்குறியாகி உள்ளன.
“கடைக்கோடி கிராமங்களுக்கும் அடிப்படை வசதிகள் அளிக்கிறோம்” என்று பெருமை பேசும் தமிழக அரசு, இந்தப் பிரச்சனைக்கு என்ன பதில் தரப்போகிறது என்பது மிகப் பெரிய கேள்வியாக மாறியுள்ளது.