பாரதத்தின் பிரதமராக நரேந்திர மோடி உள்ளதுதான் நம் முன்னோர்களின் புண்ணிய பலன் என்று தமிழ்நாடு பாஜகத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
அவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவில் கூறியதாவது:
இன்று உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் அமைந்துள்ள பாலக ராமர் கோவிலின் 161 அடி உயர கோபுரத்தின் மேல் நிறுவப்பட்ட 30 அடி உயர மஸ்தானில், சூரிய வம்சத்தைச் சின்னமாகக் காட்டும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி சூரிய குறியீடு பொறிக்கப்பட்ட தர்மக் கொடியை ஏற்றிய தருணம், உலகம் முழுவதும் உள்ள இந்துக்களின் உள்ளத்தையும் உணர்ச்சி பெருக்கில் மூழ்கடித்துவிட்டது.
எத்தனையோ போராட்டங்கள்… எண்ணற்ற வேதனைகள்… பல கண்ணீர் துளிகள்… பல உயிர்களின் தியாகங்கள்… அந்த அனைத்திற்கும் இன்று பதில் கிடைத்தது போல தோன்றுகிறது. இந்துக்களின் பல நூற்றாண்டுகளாக இருந்த கனவை படிப்படியாக நனவாக்கி வரும் நமது பிரதமருக்கு எத்தனை முறை நன்றி தெரிவித்தாலும், எத்தனை முறை வாழ்த்துகள் கூறினாலும் அது போதாது.
1990-ஆம் ஆண்டு நடைபெற்ற ராம ரத யாத்திரையில் தொடங்கிய நரேந்திர மோடியின் இந்த ஆன்மிகப் பயணம், இன்று அயோத்தியில் பகவான் ஸ்ரீ ராமருக்கு ஆலயம் எழுப்பி, அதன் உச்சியில் தர்மக் கொடியை ஏற்றும் சிறப்பு தருணத்தில் நிறைவடைந்துள்ளது. இத்தகைய பாக்கியசாலி நமது நாட்டை ஆட்சி செய்வது நம் முன்னோர்களின் அடியெடுப்பால் கிடைத்த வரம் என நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.