டெல்லியின் கடுமையான காற்று மாசு நிலையை எதிர்த்து இடது சாரி மாணவர் குழுக்கள் முன்னெடுத்த போராட்டத்தில், நக்சல் தலைவனாகக் கருதப்படும் மத்வி ஹித்மாவின் படங்களும், அவரைப் புகழும் முழக்கங்களும் எழுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அமைதியை பேண வந்த போலீசார் மற்றும் தூய்மை பணியாளர்கள்மீது பெப்பர் ஸ்பிரே பயன்படுத்தப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா கேட் பகுதி எப்போதும் 163-ஆம் பிரிவு விதிமுறைகளின் கீழ் உள்ளதாக காவல்துறை முன்பே அறிவித்திருந்தது. அதனால் அங்கு எந்தவொரு கூட்டத் திரளுக்கும் அனுமதி இல்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டது.
ஆனால், இதை மீறி பல மாணவர்கள் இந்தியா கேட் அருகே திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களைப் பிரிக்க முயன்றபோது, சிலர் ஆவேசம் காட்டி அதிகாரிகள் மற்றும் சுத்தம் செய்யும் பணியாளர்கள்மீது பெப்பர் ஸ்பிரே தெளித்ததாக கூறப்படுகிறது. இதில் சில போலீசாரும் பணியாளர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டெல்லி போலீசார் மீது இவ்வகைத் தாக்குதல் நிகழ்வது முதல்முறையென கூறப்படுகிறது. சம்பவத்தையடுத்து இரண்டு தனித்தனியான FIRகள் பதிவு செய்யப்பட்டு, 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
ஆரம்பத்தில் காற்று மாசுக்கு எதிரான போராட்டமாக அறிவிக்கப்பட்ட இந்தக் கூட்டு, பின்னர் மாவோயிஸ்டுகளைப் புகழும் நிகழ்வாக மாறியிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த நவம்பர் 18-ஆம் தேதி ஆந்திரப் பிரதேச போலீசால் சுட்டுக்கொல்லப்பட்ட ஹித்மாவின் படம் இடம்பெற்ற போஸ்டரை ஒருசில மாணவர்கள் தூக்கியிருந்ததும், அவரைக் கொச்சைப்படுத்திய காவல்துறையை குற்றம்சாட்டும் கோஷங்கள் எழுப்பப்பட்டதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
சில மாணவர்கள், “ஹித்மா பழங்குடியின மக்களுக்கான உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்தார்; அவரை அடக்குமுறையில் கொன்றனர்” என்று வாதித்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கு பல அரசியல் நபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
டெல்லி மாநில அமைச்சர் கபில் மிஸ்ரா, “சமூக ஆர்வலர்கள் என முகமூடி அணிந்த ஜிஹாதி மற்றும் நக்சல் ஆதரவாளர்கள் தான் இந்தப் போராட்டத்தின் பின்னால் இருப்பது வெளிப்படையாகியுள்ளது” என கண்டனம் தெரிவித்தார்.
பாஜக எம்.பி. சுதான்ஷு திரிவேதி, “காற்று மாசு பிரச்சனைக்கு போராடுகிறார்கள் என்று சொல்லிக்கொண்டு, மாணவர்களின் மூளையில் மார்க்சிய, மாவோயிஸ்ட் சிந்தனை திணிக்கப்படுகிறது; இது மிகவும் ஆபத்தானது” என்று கடும் குற்றச்சாட்டு முன்வைத்தார்.
நாட்டின் பாதுகாப்பு படைகள்மீது பல கொடூரத் தாக்குதல்களை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஹித்மாவை இந்தியா கேட் முன்பு புகழ்ந்த மாணவர்கள் மீது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.