பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா வழங்கிய ஆசி மற்றும் உதவி காரணமாக, சென்னை மக்களுக்கு இடைையூறு இல்லாமல் குடிநீர் வழங்கப்படுவதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம், புட்டபர்த்தி-யில் கடந்த நவம்பர் 13-ஆம் தேதி, ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்த நாள் விழா கோலாகலமாக தொடங்கியது. பிறந்த நாளான நவம்பர் 23-ஆம் தேதி சிறப்பு வழிபாடு, கலை நிகழ்ச்சிகள் மற்றும் தங்கத் தேரோட்ட பவனி நடைபெற்றது. குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக இதில் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் வாழ்க்கை மற்றும் அர்ப்பணிப்பு உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்களுக்கு சேவை செய்வதில் ஊக்கமளிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காக, முன்னாள் முதலமைச்சர்கள் என்.டி. ராமராவ் மற்றும் எம்.ஜி.ஆர் தலைமையில் தெலுங்கு கங்கை திட்டம் தொடங்கப்பட்டதாகவும், அந்த திட்டத்தை மறுஉருவாக்கி மக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க ஸ்ரீ சத்ய சாய்பாபா முன்னிலை வகித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஆந்திரா மற்றும் தமிழ்நாடு மக்களிடையே நல்லுறவு நிலைநாட்டுவதற்கும் இந்த உதவி காரணமாக உள்ளது என்றும் சி.பி. ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.