உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் இன்று திருக்கார்த்திகை தீபத்திருவிழாவுடன் கோடியேற்றத்துடன் தொடங்கியது. பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலம் ஆகவும், நினைத்தால் முக்தியளிக்கும் திருத்தலமாகவும் விளங்கும் இந்த கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா முக்கியமான திருவிழாக்களில் ஒன்றாகும்.
இவ்விழா 10 நாட்கள் நடைபெறவுள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து 30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் இதில் கலந்துகொள்வார்கள்.
திருக்கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கும் முன்னோட்டமாக, இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மன்க்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து, விநாயகர், முருகர், அண்ணாமலையார் உடனுறை உண்ணாமுலையம்மன், பராசக்தியம்மன் மற்றும் சண்டிகேஷ்வரர் போன்ற பஞ்ச மூர்த்திகள் கொடிமரம் அருகே எழுந்தருளினர். சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்களை முழங்கும் போது, பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என முழக்கமிட்டனர்.
63 அடி உயரம் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், கோயில் இணை ஆணையர் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.