குடியரசு முன்னாள் துணை தலைவர் ஜெகதீப் தன்கர், பொய் கதைகள் எனப்படும் சக்கரவியூகத்தில் இருந்து விடுபடுவது கடினம் என்றார். குடியரசு துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, ஜெகதீப் தன்கர் முதல்முறை பொதுக் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
மத்தியப்பிரதேச மாநிலம், போபாலில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் அவர் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற நவீன தொழில்நுட்பங்களால் சமூகத்திலும் நாகரிகத்திலும் மோதல்கள் அதிகரித்து வருகின்றன என்று குறிப்பிட்டார்.
“மன உறுதி, ஆன்மீகம் மற்றும் அறிவு ஆகியவற்றிலிருந்து சிலர் விலகுவது வருத்தமானது. நம் நாட்டின் ஆழமான கலாசார மற்றும் ஆன்மிக மரபுகளில் இருந்து வலிமையை பெறுவது அவசியம்,” என்று அவர் கூறினார்.
மேலும், ஒருவரின் மனதை குழப்பி செயல்பாட்டை பாதிக்கும் பொய் கதைகள் போன்ற சக்கரவியூகங்களில் இருந்து விடுபடுவது மிகுந்த சவால் என்று ஜெகதீப் தன்கர் குறிப்பிட்டார். இதுபோன்ற சூழலில், யாரும் சிக்காமல் கடவுள் காப்பாற்ற வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.