தமிழகத்தில் பட்டாசு விபத்தில் 89 பேர் காயம் — அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிப்பில் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் மொத்தம் 89 பேர் காயமடைந்துள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இன்று (அக். 20) சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று, விபத்தில் காயமடைந்தவர்களை அமைச்சர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் களப் பணியாளர்களுடன் தேநீர் அருந்தி இனிப்புகளை வழங்கி உரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“தீபாவளி நாளில் ஒவ்வொரு ஆண்டும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை வார்டுகளை பார்வையிடுவது ஒரு வழக்கமாகும்.
இம்முறைவும் காயமடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது,” என கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
- இந்தாண்டு மாநிலம் முழுவதும் பட்டாசு விபத்துகளில் காயமடைந்தவர்கள் 89 பேர்.
- அதில் 41 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர்; 48 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
- இவர்களில் 8 பேருக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை, 32 பேருக்கு மிகச் சிறிய அளவிலான காயம் உள்ளது.
- கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 6 குழந்தைகளும் ஒரு பெண்ணும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- இவர்களில் ஒருவருக்கு 7% தீக்காயம், மற்றொருவருக்கு 15% தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
- யாருக்கும் உயிர் ஆபத்து இல்லை.
அமைச்சர் மேலும் கூறினார்:
“மக்கள் பாதுகாப்புடன் தீபாவளி கொண்டாட வேண்டும்.
பட்டாசு வெடிக்கும் போது பருத்தி ஆடை அணியவும், செருப்பு அணியவும், அருகில் தண்ணீர் வைத்திருக்கவும் வேண்டும்.
நைலன் ஆடைகள் தீப்பிடிக்கும் அபாயம் அதிகம் என்பதால் தவிர்க்க வேண்டும்.
ராக்கெட் பட்டாசுகளை நேராக வைத்து வெடிக்க வேண்டும்,” என அவர் அறிவுறுத்தினார்.
தீபாவளி நாளிலும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களது குடும்பத்தை விட்டு மருத்துவச் சேவை ஆற்றுகிறார்கள் என்பதை அமைச்சர் பாராட்டினார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அவர் கூறியதாவது:
“முதல்வரின் வழிகாட்டுதலின்படி பல துறைகளின் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.
மழையால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன,” என தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மருத்துவக் கல்வி இயக்குநர் சுகந்தி ராஜகுமாரி, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை முதல்வர் கவிதா, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உடன் இருந்தனர்.