தாமிரபரணி ஆற்றிலிருந்து தனியார் நிறுவனங்கள் எடுத்துச் செல்லும் தண்ணீரை அரசு லிட்டருக்கு வெறும் ஒரு பைசா மட்டுமே வசூலிப்பதாக தெரியவந்ததால், மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் நீதிபதிகள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர்.
தூத்துக்குடியைச் சேர்ந்த காமராஜ் என்ற நபர், தாமிரபரணியில் இருந்து நீர் எடுத்துக் கொள்ளும் நிறுவனங்களின் தண்ணீர் வரிப் பாக்கிகளை வசூலிக்க வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
வழக்கின் விசாரணைக்குப் பதிலளித்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து லிட்டருக்கு ஒரு பைசா என்ற விகிதத்தில் தண்ணீர் கட்டணம் பெறப்படுகிறது என்று தெரிவித்தனர்.
இதைக் கேட்ட நீதிபதிகள், “தனியார் நிறுவங்கள் ஒரு லிட்டர் பாட்டிலுக்கு 20 ரூபாய் வசூலிக்கின்றன; ஆனால் அரசு அவர்களிடம் ஒரு லிட்டருக்கு ஒரு பைசாவே வாங்குகிறதா?” என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், 20 ஆண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட இந்த கட்டணம் ஏன் இதுவரை உயர்த்தப்படவில்லை என்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு அடுத்த தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.