அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகட்டும் – தீபாவளி வாழ்த்து: ஆளுநர் மற்றும் அரசியல் தலைவர்கள்
கோலாகலமாகக் கொண்டாடப்படும் தீபாவளி திருநாளை முன்னிட்டு, தமிழக ஆளுநர், மத்திய மற்றும் மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் மக்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ஆர். என். ரவி தனது வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
“தீபாவளி என்பது இருளை ஒளி வெல்வதும், தீமையை நன்மை வெல்வதும், அறியாமையை ஞானம் வெல்வதையும் குறிக்கும் புனித நாள். அன்னை லட்சுமி அனைவருக்கும் மகிழ்ச்சி, ஆரோக்கியம், செழிப்பு ஆகியவற்றை வழங்கி, அன்பும் ஒற்றுமையும் நிறைந்த சமூகத்தை உருவாக்க அருள்புரியட்டும்” என்றார்.
மத்திய இணையமைச்சர் எல். முருகன் கூறியதாவது:
“இந்த தீபாவளி திருநாளில் அனைவரும் நல்ல உடல் நலத்துடன், ஆனந்தம் நிறைந்த வாழ்க்கையை அனுபவிக்கட்டும். தமிழக மக்களின் துயரங்களுக்கு தீர்வு காணவும், அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலுக்குப் பின் நல்லாட்சி மலரவும் வேண்டுகிறேன்” என்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்ததாவது:
“தீபாவளி திருநாளில் அன்பும் அமைதியும் நம் நாட்டில் பரவட்டும். துன்பங்கள் நீங்கி, ஒளிமயமான எதிர்காலம் உருவாகட்டும். அனைவரது வாழ்விலும் நலமும் செழிப்பும் பெருகட்டும்” என்றார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது:
“தீமையை அழிக்கும் தீபாவளி நாளில், சமூக அநீதி மற்றும் வகுப்புவாத சக்திகளையும் தோற்கடிப்போம் என்ற உறுதியுடன் தீபாவளியை கொண்டாடுவோம்” என்றார்.
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்துச் செய்தியில்,
“வாழ்க்கையின் இருளை நீக்கி ஒளியை வழங்கும் தீபாவளி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது இதயப்பூர்வ நல்வாழ்த்துகள்” என தெரிவித்தார்.
பாமக நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ் கூறியதாவது:
“இல்லாமை எனும் இருள் அகன்று, இன்ப ஒளி பிரகாசித்து, இல்லங்களிலும் உள்ளங்களிலும் அன்பும் ஆனந்தமும் பொங்கட்டும்” என்றார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்:
“இருளை நீக்கி ஒளியை தரும் தீபாவளி திருநாளில் மகிழ்ச்சியும் நலனும் அனைவரது வாழ்விலும் நிலைக்கட்டும்” என்றார்.
தமாகா தலைவர் ஜி. கே. வாசன் கூறியதாவது:
“தமிழக மக்களின் வாழ்க்கையில் துயரங்கள் நீங்கி, நன்மைகள் நிறைந்து, இன்பங்கள் பெருகி வளமான வாழ்வு கிடைக்கட்டும்” என வாழ்த்தினார்.
அமமுக பொதுச்செயலாளர் டி. டி. வி. தினகரன் தெரிவித்தார்:
“தீமைகளை அழித்து நன்மைகளை வளர்க்கும் தீபாவளி திருநாள், மக்கள் அனைவருக்கும் நல்வாழ்வையும் புதிய நம்பிக்கையையும் அளிக்கட்டும்” என்றார்.
பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியதாவது:
“அறியாமை மற்றும் அச்சம் போன்ற இருளை நீக்கி, அறிவும் தெளிவும் நிறைந்த வாழ்வை அனைவரும் பெறட்டும். மகிழ்ச்சி, அமைதி நிலைத்திடட்டும்” என்றார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே. எம். காதர் மொகிதீன் தெரிவித்தார்:
“தீபாவளி என்பது மனித நேயத்தை வளர்க்கும் ஒளியின் திருவிழா. நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் நேசித்து, ஒற்றுமையுடன் வாழ்வோம்” என்றார்.
மேலும் தமிழிசை சௌந்தரராஜன், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, விஜய் வசந்த் எம்.பி., முன்னாள் எம்.பி.க்கள் சரத்குமார், சு. திருநாவுக்கரசர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி. சேகர், மஜக தலைவர் தமிமுன் அன்சாரி, கிறிஸ்தவ மதச்சார் பற்ற கட்சி தலைவர் மார்டின் உள்ளிட்டோரும் தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.