அடுத்த ஆண்டு அசாம் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பு நடவடிக்கை தொடங்குகிறது. இதற்கான உத்தரவை தேர்தல் ஆணையம் நேற்று பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவு அசாம் மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவுறுத்தலின் அடிப்படையில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (Special Summary Revision – SSR) இன்று (நவம்பர் 18) முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது.
இந்த நடவடிக்கையின் போது, தகுதி பெற்ற புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், தவறுகள் திருத்தம் செய்தல், முகவரி மாற்றம், இறந்தோர் பெயரை நீக்கம் செய்தல் போன்றவை மேற்கொள்ளப்பட உள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடி மையங்களிலுள்ள புகார்/விண்ணப்ப மையங்கள் வழியாக மக்கள் இந்த பணியில் கலந்துக்கொள்ளலாம்.
வரவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, துல்லியமான மற்றும் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் தயாரிக்க இந்த சிறப்பு திருத்தப் பணிக்கு தேர்தல் ஆணையம் முக்கியத்துவம் அளித்துள்ளது.