அறுந்து கிடக்கும் மின்கம்பிகளிலிருந்து விலகுமாறு மின்வாரியம் எச்சரிக்கை
மழைக் காலங்களில் பாதுகாப்பாக இருக்க பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மின்வாரியம் எச்சரிக்கை அறிவித்துள்ளது.
மின்வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அறுந்து கிடக்கும் மின்கம்பிகளுக்கு அருகில் செல்லவோ, தொடவோ முயற்சிக்கக் கூடாது. மின்சாரம் பாயும் அபாயம் இருப்பதால், அவ்விடங்களில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
மழை காலங்களில் ஈரமான கைகளால் மின்சுவிட்சுகள் அல்லது மின்சாதனங்களை இயக்க வேண்டாம். வீட்டின் சுவர்கள் ஈரப்பதமாக இருந்தால், எந்த சுவிட்சையும் இயக்குவது தவிர்க்கப்பட வேண்டும். அதேபோல் ஈரமான சுவர்களில் கை வைப்பதும் பாதுகாப்பற்றது.
மின்சாரம் வந்து சேர்ந்த பிறகு, நீரில் நனைந்த அல்லது ஈரமான மின்விசிறி, விளக்குகள் போன்ற மின்சாதனங்களை உடனடியாக இயக்க வேண்டாம். மின்கம்பிகள் அறுந்து கிடக்கும் இடங்கள், மின்கம்பங்கள், கேபிள்கள், டிரான்ஸ்பார்மர்கள், பில்லர் பாக்ஸ்கள் ஆகியவற்றின் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
மேலும், சாலைகளில் அல்லது தெருக்களில் மின்சார வசதிகள் அருகே தேங்கியுள்ள நீரில் நடப்பது, ஓடுவது, விளையாடுவது அல்லது வாகனம் இயக்குவது கடுமையாக தவிர்க்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின்சேவை தொடர்பான பிரச்சினைகள், மின்கம்பி அறுந்து விழுதல், மின்தடை போன்ற குறைகளை உடனடியாக “94987 94987” என்ற எண்மூலம் மின்னகத்துடன் தொடர்பு கொண்டு புகாரளிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.