திருவேற்காடு சுகாதார நிலையம் மூடப்படுவதற்கு அன்புமணி எதிர்ப்பு
திருவேற்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தை மூடும் அரசின் முடிவுக்கு பாமக தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னைக்கு அருகில் உள்ள திருவேற்காடு காடுவெட்டி பகுதியில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, “இடமாற்றம்” என்ற பெயரில் மூட தமிழக அரசு முயற்சிக்கிறது. கிராமப்புற மக்களுக்கு நீண்டகாலமாக மருத்துவ சேவையளித்து வரும் இந்நிலையத்தை மூடுவது கண்டிக்கத்தக்கது.
காடுவெட்டியில் 1967ஆம் ஆண்டு அரசு மகப்பேறு மையமாக துவங்கிய இந்த மருத்துவமனை, 2013ஆம் ஆண்டில் விரிவுபடுத்தப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக இயங்கி வருகிறது. இதன் மூலம் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பலனடைந்து வருகின்றனர்.
இந்நிலையத்தை நூம்பல்–புலியம்பேடு பகுதிக்கு மாற்றி, அங்குள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்ற தமிழக அரசு தீர்மானித்துள்ளது. இதற்காக 2022ஆம் ஆண்டு ரூ.1.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
அந்த நிதியை காடுவெட்டி சுகாதார நிலையத்தை மேம்படுத்த பயன்படுத்தியிருந்தால் எந்த பிரச்சினையும் ஏற்பட்டிருக்காது. ஆனால், புதிய நகர்ப்புற சுகாதார நிலையம் 7 கிலோமீட்டர் தூரத்தில், போக்குவரத்து மற்றும் சாலை வசதிகள் இல்லாத இடத்தில் அமைக்கப்படுவது, உள்ளூர் மக்களுக்கு சிகிச்சை பெற சிரமமாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
மருத்துவமனைகள் மக்களின் நலனுக்காக இயங்கவேண்டும் என்பதால், காடுவெட்டி ஆரம்ப சுகாதார நிலையம் தற்போதைய இடத்திலேயே தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், அதற்கான கூடுதல் நிதி ஒதுக்கி மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், நூம்பல்–புலியம்பேடு பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய நகர்ப்புற சுகாதார நிலையத்தை தனியே இயங்க அனுமதித்து, அதற்குத் தேவையான மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை அரசு நியமிக்க வேண்டும் என்றும் அன்புமணி தெரிவித்தார்.