மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் 39 பல் மருத்துவ உதவியாளர் நியமனம்
தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணியின் கீழ் உள்ள பல் மருத்துவ உதவியாளர் பதவியில் 39 காலிப் பணியிடங்களை நிரப்ப மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த நியமனங்கள் நேரடி தேர்வு முறையில் மேற்கொள்ளப்பட உள்ளன. பிளஸ்–2 (அறிவியல் பிரிவு) முடித்ததுடன், பல் மருத்துவத்தில் டிப்ளமா பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். மேலும், விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு பல் மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும் என்பதும் கட்டாயமாகும்.
தகுதியானவர்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.mrb.tn.gov.in மூலம் நவம்பர் 2 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த பணியிடங்களில் 20 சதவீத இடஒதுக்கீடு தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, விண்ணப்பதாரர்கள் 1ம் வகுப்பு முதல் பல் மருத்துவ டிப்ளமா படிப்பு வரை தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.