சென்னையில் உள்ள 947 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் தொடர்பாக வாக்காளர் உதவி மையங்கள் நேற்று செயல்பட்டன. தமிழகம் முழுவதும் நவம்பர் 4-ம் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தப்பணிகள் நடக்கின்றன. பொதுமக்கள் இதை செய்யும் போது சந்திக்கும் சிரமங்களை கருத்தில் கொண்டு, சென்னை மாநகராட்சி சார்பில் நவம்பர் 18-ம் தேதி முதல் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான உதவி மையங்கள் அமைக்கப்பட்டன.
இந்த மையங்கள், வாக்காளர்களின் சந்தேகங்களுக்கு பதில் சொல்லும் வகையில் செயல்பட்டன. அதன்படி, சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள பள்ளிகளை வாக்குச்சாவடி மையங்களாகக் கொண்டு, உதவி மையங்கள் காலை முதல் திறக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன.
வாக்குச்சாவடி அலுவலர்கள், வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்வதற்கும் தேவையான வழிகாட்டுதல்களையும், ஆலோசனைகளையும் வழங்கினர். பொதுமக்கள் ஆர்வத்துடன் காலை முதலே மையங்களை வந்தடைந்து சந்தேகங்களை கேட்டு, படிவங்களை நிரப்பி சென்றனர்.
சென்னையின் 947 வாக்குச்சாவடிகளிலும் உதவி மையங்கள் நடைமுறையில் இருந்தன. இந்த மையங்கள் நவம்பர் 25-ம் தேதி வரை மொத்தம் 8 நாட்களுக்கு செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி அலுவலர் கூறியதாவது:
“உதவி மையத்திற்கு வரும் பெரும்பாலானோர் 2005-ம் ஆண்டு வாக்கு எங்கு இருந்தது என்பதைப் பார்க்க கேட்கின்றனர். அந்த தகவல்களை சரிபார்த்து, விண்ணப்பங்களை நிரப்பி உதவி செய்கிறோம். பொதுமக்கள் இந்த உதவி மையங்களை முழுமையாக பயன்படுத்த வேண்டும்” என்றார்.