கோவையில் நடைபெற உள்ள இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 19-ம் தேதி வரவிருக்கிறார். இந்த நிகழ்வை தொடக்கி வைக்க பிரதமர் நேரில் வருவதால், கோவை கொடிசியா வளாகத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் மாநாட்டிற்கு தேசிய கவனம் திரண்டுள்ளது.
பிரதமர் மோடி புட்டபர்த்தியில் இருந்து இன்று மதியம் 1.25 மணிக்கு கோவை வந்தடைவார். விமான நிலையத்தில் ஆளுநர் ஆர். என். ரவி, மத்திய அமைச்சர் எல். முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோருடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமாகா தலைவர் ஜி. கே. வாசன், ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் ஆகியோரும் அவரை வரவேற்க உள்ளனர்.
2024 மக்களவைத் தேர்தலுக்கு முன், என்.டி.ஏ கூட்டணியில் இருந்த அதிமுக, பின்னர் கூட்டணியிலிருந்து வெளியேறியது. அதன் பிறகு பிரதமர் பலமுறை தமிழகத்துக்கு வந்தாலும், பழனிசாமி அவரைச் சந்திக்கவோ, வரவேற்கவோ போகவில்லை.
ஆனால் இப்போது, அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக மீண்டும் என்.டி.ஏவில் இணைந்துள்ளது.
இந்த பின்னணியில், இன்று கோவையில் பிரதமரை விமான நிலையத்தில் நேரடியாக வரவேற்கப் போகும் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் நடவடிக்கை, அரசியல் ரீதியாக குறிப்பிடத்தக்க மாற்றத்தை குறிக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் பழனிசாமி, இயற்கை விவசாயிகள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வதும் முக்கிய அம்சமாகும்.
பிஹார் தேர்தலில் வெற்றி பெற்ற பின், தமிழகத்தை நோக்கி பாஜகவின் கவனம் அதிகரித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பழனிசாமி – மோடி சந்திப்பு பல்வேறு அரசியல் கணக்கீடுகளுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமரைச் சந்திக்கும் போது கூட்டணிக் கணக்குகள், தேர்தல் முன் பேச்சுவார்த்தைகள், என்.டி.ஏவின் தமிழக முன்னேற்ற வாய்ப்புகள் ஆகியவை குறித்து பழனிசாமி பேசலாம் என தகவல்கள் கூறுகின்றன