விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, நெல் கொள்முதல் செய்யும் போது அனுமதிக்கப்படும் ஈரப்பத அளவை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், குறுவை (கரீஃப்) பருவத்தில் தமிழகத்தில் சாதனை அளவிற்கு நெல் உற்பத்தி மற்றும் கொள்முதல் எய்தப்பட்டுள்ளதாகவும், இதனால் நெல் கொள்முதலில் ஈரப்பத தளர்வை வழங்குவது அவசியமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
சாதனை நெல் கொள்முதல்:
16.11.2025 நிலவரப்படி, கடந்த ஆண்டு 4.81 லட்சம் மெட்ரிக் டன் இருந்த குறுவை பருவ நெல் கொள்முதல், இந்த ஆண்டில் 14.11 லட்சம் மெட்ரிக் டனாக உயர்ந்துள்ளது. இது தமிழக வரலாற்றில் குறுவை நெல் கொள்முதலுக்கான மிக உயர்ந்த சாதனையாகும்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மாநிலம் முழுவதும் 1,932 நெல் கொள்முதல் மையங்களைத் திறந்து, 1,86,674 விவசாயிகளிடமிருந்து ரூ.3,559 கோடி மதிப்பிலான 14.11 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 1,095 மையங்கள் மூலமாக 4.83 லட்சம் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.
அரிசி கொள்முதல் இலக்கை உயர்த்த கோரிக்கை:
KMS 2025–26க்கான அரிசி கொள்முதல் இலக்கை 20 லட்சம் மெட்ரிக் டனாக நிர்ணயிக்க தமிழக அரசு பரிந்துரைத்திருந்தது. ஆனால் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை, இலக்கை 16 லட்சம் டனாக மட்டுமே நிர்ணயித்துள்ளது.
நெல் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பெரும் உயர்வை கருத்தில் கொண்டு இலக்கை திருத்தி உயர்த்த அனுமதி வழங்க வேண்டும் என முதல்வர் கடிதத்தில் கோரியுள்ளார்.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு ஈரப்பத தளர்வு அவசியம்:
நெல் தானியங்களில் 17% ஈரப்பதம் மட்டுமே தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது. மாநிலம் 19.10.2025 அன்று இதை 22% ஆக உயர்த்த கோரிக்கை விடுத்திருந்தது.
மத்திய குழுக்கள் தமிழகத்தில் மாதிரிகள் சேகரித்தும், இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.
16.11.2025 முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், நெல் தரம் பாதிக்காமல் இருக்க உடனடி தளர்வு உத்தரவு அவசியமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
செறிவூட்டப்பட்ட அரிசி மாதிரி சோதனையில் தளர்வு கோரிக்கை:
செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) மாதிரிகள் சோதனை பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால்,
- FRK சிப்பமிடும் அளவை 25 கிலோவிலிருந்து 50 கிலோவாக உயர்த்துதல்,
- மாதிரி தொகுதி அளவை 10 MT இல் இருந்து 25 MT ஆக மாற்றுதல்,
- தென்னிந்திய மாநிலங்களில் உள்ள இந்திய உணவுக் கழக அதிகாரிகளுக்கு மாதிரி எடுக்கும் அதிகாரம் வழங்குதல்
ஆகிய பரிந்துரைகளை தமிழக அரசு முன்வைத்துள்ளது.
ஒரு மாதிரி முடிவிற்கு 12 நாட்கள் எடுக்கப்படுவது, நெல் அரவை மற்றும் அரிசி நகர்வில் தாமதத்தை ஏற்படுத்துவதாகவும், மேற்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டால் முடிவு பெறும் காலம் 7 நாட்களாக குறையும் எனவும் மாநில அரசு தெரிவித்துள்ளது.
விவசாயிகள் நலன் கருதி விரைந்து முடிவு வேண்டும்:
இந்திய உணவுக் கழகம் மற்றும் மத்திய அரசினர் விரைந்து நேர்மறையான முடிவு எடுத்து, நெல் கொள்முதல் மற்றும் அரிசி விநியோகத்தில் இடையூறு ஏற்படாத வகையில் ஆதரவு வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.