“ஐஎன்எஸ் விக்ராந்த் பாகிஸ்தானுக்கு தூக்கமில்லா இரவுகளை கொடுத்தது” – பிரதமர் மோடி உருக்கம்
இந்திய கடற்படை வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் பாகிஸ்தானுக்கு தூக்கமில்லா இரவுகளை ஏற்படுத்திய கப்பல் எனக் குறிப்பிடி, நெகிழ்ச்சியுடன் உரையாற்றினார்.
ஒவ்வொரு ஆண்டும் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடும் வழக்கப்படி, இந்த ஆண்டு பிரதமர் மோடி கோவா மற்றும் கர்நாடகாவின் கார்வார் கடற்கரையில் நங்கூரமிட்டிருந்த ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார்.
அப்போது வீரர்களை நோக்கி உரையாற்றிய அவர் கூறியதாவது:
“இன்று மறக்க முடியாத நாள். ஒருபுறம் கடல் – மறுபுறம் இந்தியத் தாயின் துணிச்சலான மகன்கள். எல்லையற்ற சக்தியின் சின்னமாக நமது ஐஎன்எஸ் விக்ராந்த் திகழ்கிறது. கடலில் சூரிய ஒளி மின்னுவது போல, உங்களின் வீரத் தீபாவளி வெளிச்சமும் எனது மனதை ஒளிரச்செய்கிறது.
நேற்று ஐஎன்எஸ் விக்ராந்தில் நான் கழித்த இரவு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. உங்களின் ஆற்றல், தேசபக்தி, அர்ப்பணிப்பு எல்லாம் என்னை ஆழமாகக் கவர்ந்தது. உங்களின் பாடல்களில் ‘ஆபரேஷன் சிந்தூரின்’ வீரத்தையும் உணர முடிந்தது.
இந்த கப்பல்கள் இரும்பால் ஆனவையாக இருந்தாலும், உங்களைப் போல வீரர்கள் அதில் உயிர் ஊட்டுகின்றனர். உங்களுடன் இருந்த ஒவ்வொரு தருணத்திலும் நான் பெருமையுடனும் நன்றியுடனும் நிரம்பினேன். நேற்று இரவு நான் வழக்கத்தை விட சீக்கிரம் தூங்கினேன் – காரணம் மனநிறைவு,” என அவர் கூறினார்.
பின்னர் கடற்படை வீரர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர் மோடி, “நான் என் குடும்பத்துடன் கொண்டாடுவதுபோல், இப்போது எனது உண்மையான குடும்பமான உங்களுடன் இந்த திருநாளைக் கொண்டாடுகிறேன். இது எனக்கு மறக்க முடியாத தருணம்,” என்றார்.
அதனைத் தொடர்ந்து அவர் கூறியதாவது:
“சில மாதங்களுக்கு முன், ‘விக்ராந்த்’ என்ற பெயரே பாகிஸ்தானில் அச்சத்தை ஏற்படுத்தியது. ஐஎன்எஸ் விக்ராந்த் பாகிஸ்தானுக்கு தூக்கமில்லா இரவுகளை அளித்தது. அதன் பெயரே எதிரியின் தைரியத்தை உடைக்கும் சக்தியாக இருந்தது.
ஆபரேஷன் சிந்தூரில், இந்திய கடற்படையின் வீரத்தையும், விமானப்படையின் திறமையையும், ராணுவத்தின் ஒருங்கிணைப்பையும் உலகம் கண்டது. அதனால் பாகிஸ்தான் மிக விரைவாக சரணடைந்தது.
கடந்த 10 ஆண்டுகளில் நமது ஆயுதப் படைகள் ‘சுயசார்பு பாரத்’ நோக்கி வேகமாக முன்னேறுகின்றன. பாதுகாப்பு உற்பத்தி மூன்று மடங்காக உயர்ந்துள்ளது; கடந்த ஆண்டில் மட்டும் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பை எட்டியுள்ளது. 2014 முதல் இதுவரை 40க்கும் மேற்பட்ட உள்நாட்டு போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளன. சராசரியாக, ஒவ்வொரு 40 நாட்களுக்கும் ஒரு புதிய உள்நாட்டு கப்பல் கடற்படையில் சேர்க்கப்படுகிறது,” என்றார்.
மேலும், “பிரமோஸ், ஆகாஷ் போன்ற நமது ஏவுகணைகள் உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. பல நாடுகள் அவற்றை வாங்க விரும்புகின்றன. இந்தியா உலகின் முன்னணி பாதுகாப்பு ஏற்றுமதியாளர்களில் இடம் பெறுவதே எங்கள் குறிக்கோள். கடந்த பத்து ஆண்டுகளில் பாதுகாப்பு ஏற்றுமதி 30 மடங்காக உயர்ந்துள்ளது,” என்றும் கூறினார்.
இறுதியாக பிரதமர் மோடி, “இந்தியப் பெருங்கடல் வழியாக உலகின் எண்ணெய் போக்குவரத்தின் 66% நடைபெறுகிறது. இத்தகைய முக்கிய பாதைகளைப் பாதுகாப்பதில் இந்தியக் கடற்படை உண்மையான காவலராக திகழ்கிறது,” என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.