உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரவிருப்பதால், வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்று கோரி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
அரசியல் சாசனத்தின் 243-E, 243-U பிரிவுகள், கேரள பஞ்சாயத்து சட்டம் பிரிவு 94, மேலும் கேரள நகராட்சி சட்டம் ஆகியவற்றின் படி, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஐந்து ஆண்டுகள் முடிவதற்குள் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும். இதன் படி கேரளாவில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரும் டிசம்பர் 21, 2025-க்கு முன்னதாகவே தேர்தல் முடிக்கப்பட வேண்டும்.
கேரளாவில் மொத்தம் 1,200 உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன —
- 941 கிராம பஞ்சாயத்துகள்
- 152 ஒன்றிய பஞ்சாயத்துகள்
- 14 மாவட்ட பஞ்சாயத்துகள்
- 87 நகராட்சிகள்
- 6 மாநகராட்சிகள்
மொத்த வார்டுகள்: 23,612
இதனை முன்னிட்டு, கேரள மாநில தேர்தல் ஆணையம் டிசம்பர் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளது.
- டிச. 9 : திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம்
- டிச. 11 : திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு
வாக்கு எண்ணிக்கை டிச. 13, தேர்தல் செயல்முறை முடியும் நாள் டிச. 18 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்திய தேர்தல் ஆணையம் நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்ய உத்தரவு வெளியிட்டுள்ளது.
கேரள அரசு மனுவில் வலியுறுத்தியுள்ளதாவது:
- தேர்தல் பணிகளும், சிறப்பு தீவிர திருத்தமும் ஒன்றாக நடக்கும் பட்சத்தில் அரசு பணியாளர்கள் கடுமையாக சோர்வடைவார்கள்.
- அரசின் நாளந்தோறும் நடைபெறும் பணிகள் தடைப்படும்.
- நிர்வாக செயல்பாடே இடர்பாடாகிவிடும்.
சிறப்பு தீவிர திருத்தத்துக்கு:
- 1,76,000 அரசு பணியாளர்கள்,
- 68,000 காவல்துறை பணியாளர்கள்,
- கூடுதலாக 25,668 பணியாளர்கள் தேவைப்படும்.
இத்தனை பெரிய அளவில் பணியாளர்களை தற்போது தேர்தல் பணிகளிலிருந்து பிரித்து வழங்குவது மாநில நிர்வாகத்துக்கு பெரிய தடங்கலாகும் என்று அரசு கூறியுள்ளது.
மேலும், கேரள அரசு கொள்கைப் ரீதியாக இந்த திருத்தத்துக்கு எதிரானதல்ல, ஆனால் அது நடைபெறும் காலம் மிகவும் சிக்கலானது என்பதே இப்போது பிரச்சினை என தெரிவித்துள்ளது.
ஆகையால், இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது