பாகிஸ்தான் பீரங்கிகளை கைப்பற்றி ஊர்வலமாக சென்ற ஆப்கன் படைகள்: தலிபான் செய்தித் தொடர்பாளர் தகவல்
பாகிஸ்தானுக்கு சொந்தமான ராணுவ டாங்கிகளை ஆப்கானிஸ்தான் படைகள் கைப்பற்றியதாக தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாகித் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
“எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு ஆப்கான் படைகள் தகுந்த பதிலடி கொடுத்தன. இதில் பல பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் ராணுவ டாங்கிகள் மற்றும் பல்வேறு ஆயுதங்கள் ஆப்கான் படைகளால் கைப்பற்றப்பட்டன. மேலும் பாகிஸ்தான் ராணுவ கட்டமைப்புகளும் அழிக்கப்பட்டன,” என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் இடையே 48 மணி நேர போர்நிறுத்தம் ஒப்புக்கொள்ளப்படும் முன்பே, ஆப்கானிஸ்தானின் தென்கிழக்குப் பகுதியான ஸ்பின் போல்டாக் மாகாணம் தெருக்களில், பாகிஸ்தானிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் ராணுவ டாங்கிகள் அணிவகுத்துச் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த வீடியோ வேகமாக வைரலானது.
ஆனால், இதை பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது. அந்த வீடியோவில் காணப்படும் டாங்கிகள் பாகிஸ்தான் ராணுவத்துக்கு சொந்தமானவை அல்ல என தெரிவித்துள்ளது.
ஜியோ நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியதாவது:
“அவர்கள் (ஆப்கானிஸ்தான்) பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதாகக் கூறுகிறார்கள். ஆனால் அவை எங்களுடையவை அல்ல. அவர்கள் பழைய இரும்புக்கடையிலிருந்து வாங்கிய டாங்கிகளைப் பயன்படுத்தியிருக்கலாம்,” என்றார்.
இதற்கிடையில், அந்த வீடியோக்களின் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும், ஏஐ மூலம் செய்யப்பட்ட படத்தகவல் ஆய்வில், அதில் காணப்படும் டாங்கிகள் சோவியத் காலத்து T-55 மாடல் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த டாங்கிகள் 1980களிலிருந்து ஆப்கானிஸ்தான் வசம் உள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.