திருப்பதிக்கு அருகிலுள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில், கார்த்திகை மாத வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தாயாருக்கு ஆந்திர மாநில அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனம் ராம்நாராயண் ரெட்டி பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்கினார்.
விழா மிகவும் கோலாகலமாக, விமரிசையாக நடைபெற்றது. முன்தினம் ஆகம விதிகளின் படி அங்குரார்ப்பன நிகழ்ச்சிகள் நடந்தது. இதன்பின், கோயிலில் உள்ள தங்கக் கொடி மரத்தில் யானை சின்னம் பொறித்த பிரம்மோற்சவ கொடியேற்றம் நடந்தது. வேத பண்டிதர்கள் வேதங்கள் ஓத, மங்கள வாத்தியங்கள் இசைக்க, பத்மாவதி தாயார் அருகில் உற்சவ முர்த்தி வைக்கப்பட்டு கொடியேற்றம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
நேற்றுமாலை, ஆந்திர அரசு சார்பில், அமைச்சர் ஆனம் ராம்நாராயண் ரெட்டி பட்டு வஸ்திரங்களை தலை மீது சுமந்து தேவஸ்தான ஆகம வல்லுநர்களுக்கு ஒப்படைத்தார்.
சின்ன சேஷ வாகன பவனி:
நேற்றிரவு, பத்மாவதி தாயார் சின்ன சேஷ வாகனத்தில் நகர்ந்து, 4 மாட வீதிகளில் பக்தர்களுக்கு அருள் பரப்பினார். வாகனத்திற்கு முன்பாக காளைகள், குதிரைகள், யானைகள் செல்லும் வழியாக, ஜீயர்கள் நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் பாடி உடன் நடந்தனர். பின்னர், பல மாநிலங்களைச் சேர்ந்த நடனக் கலைஞர்கள் நடனமாடினர். மாட வீதிகளில் கூடியிருந்த பக்தர்கள் தாயாருக்கு ஆரத்தி செய்து வழிபட்டனர்.
மலர் கண்காட்சி:
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, திருச்சானூர் கோயிலுக்கு எதிரில் உள்ள வெள்ளிக்கிழமை தோட்டத்தில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினர் மற்றும் தோட்டக்கலை துறை இணைந்து மலர் கண்காட்சி அமைத்தனர். தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங் ரிப்பன் வெட்டி தொடங்கி, கண்காட்சி திறந்து வைத்தார். ஆயுர்வேத மற்றும் சிற்பக்லை கண்காட்சிகள் பக்தர்களை கவர்ந்தன.
ஜொலிக்கும் திருச்சானூர்:
விழா 17-ம் தேதி தொடங்கி, 25-ம் தேதி வரை 9 நாட்கள் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. முகப்பு கோபுரம் மற்றும் முக்கிய இடங்களில் மின் விளக்கு, தோரணங்கள் மற்றும் மலர் அலங்காரங்கள் கண்ணை கவரும் விதமாக அமைக்கப்பட்டுள்ளன.