வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, வன்முறை வழக்கில் குற்றவாளி என அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
2024 ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற போராட்டங்களின் போது ஏற்பட்ட தாக்குதல், வன்முறை மற்றும் உயிரிழப்பு சம்பவங்களுக்கு நேரடியாக ஷேக் ஹசீனா பொறுப்பானவர் என்று நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. தன் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்களைத் துன்புறுத்தவும் கொல்லவும் உத்தரவிட்டது நிரூபணமாகியுள்ளது என நீதிபதி கூறினார்.
மாணவர்கள் நடத்திய பெருமளவு போராட்டத்தால் கடந்த ஆண்டு ஆகஸ்டில் அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகியிருந்தார். அதன் பின் நாட்டை விட்டு புறப்பட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதனைத் தொடர்ந்து போராட்ட மாணவர் இயக்கத்தின் முன்முயற்சியில், நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகம்மது யூனுஸ் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார். மாணவர் இயக்கத்தைச் சேர்ந்த பலரும் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.