“என்னை இழிவாக திட்டி, காலணியை கழற்றி தாக்க முயற்சி செய்தனர்” என்று லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா தனது சகோதரர் தேஜஸ்வியை நேரடியாகச் சொல்லாமல், வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளார்.
ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மற்றும் ராப்ரி தேவி தம்பதியருக்கு மிசா பாரதி, ரோகிணி ஆச்சார்யா, சாந்தா சிங், ராகினி யாதவ், ஹேமா யாதவ், அனுஷ்கா யாதவ், தேஜ் பிரதாப், ராஜலட்சுமி, தேஜஸ்வி யாதவ் என ஒன்பது பிள்ளைகள் உள்ளனர். அனைவரும் திருமணமானவர்கள். முதலாவது மகள் மிசா பாரதி மற்றும் மகன்கள் தேஜ் பிரதாப், தேஜஸ்வி ஆகியோர் அரசியலில் ஈடுபட்டுள்ளனர்.
ரோகிணி ஆச்சார்யா எம்பிபிஎஸ் பட்டம் பெற்றவர். திருமணமான பிறகு கணவர் ராவ் சமரேஸுடன் சிங்கப்பூரில் வாழ்ந்து வந்தார். 2022ஆம் ஆண்டு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்ட லாலுவிற்கு ரோகிணி தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கினார். பின்னர் 2024 மக்கள்வைத் தேர்தலில் சரண் தொகுதியில் போட்டியிட்டார், ஆனால் வெற்றி பெறவில்லை. அதன் பின் மீண்டும் சிங்கப்பூருக்கு திரும்பினார்.
படியே, பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அவர் மீண்டும் பிஹாருக்கு வந்து பிரசாரத்தில் தீவிரமாக இறங்கினார். அவரின் திரும்புகைக்கு தேஜஸ்வி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. லாலுவின் சமரசம் காரணமாகவே அவர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டதாக தகவல். ஆனால் தேர்தலில் ஆர்ஜேடி கடும் தோல்வி அடைந்ததால், அதன் காரணம் ரோகிணியிடம் சுமத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் ரோகிணி சமூக வலைத்தளத்தில்,
“நான் அரசியலையும், குடும்பத்தையும் விட்டு விலகுகிறேன்; சஞ்சய் யாதவ், ரமீஸ் ஆகியோரே இதை விரும்புகிறார்கள். எல்லா குற்றச்சாட்டையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டார்.
அதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில்,
“ஒரு மகளாகவும், சகோதரியாகவும், மனைவியாகவும், தாயாகவும் நான் நேற்று அவமானம் செய்யப்பட்டேன். மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டப்பட்டேன். (தேஜஸ்வி) காலணியை கழற்றி என்னை அடிக்கவும் முயன்றார். எனது சுயமரியாதையைத் தியாகம் செய்யவில்லை. இதனால் பெற்றோர்களையும் சகோதரிகளையும் கண்ணீருடன் விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது” என கூறினார்.
மேலும்,
“எனது தாய் வீட்டில் இருந்து என்னை வெளியேற்றிவிட்டனர். இன்று நான் ஆதரவின்றி நிற்கிறேன். என்னுடைய வாழ்க்கைப் பாதையை யாரும் நிர்ணயிக்க வேண்டாம். எந்தக் குடும்பத்திலும் ரோகிணி போன்ற பெண் பிறக்காது என்பதே என் வேண்டுகோள். நான் மோசமானவள், அசுத்தமானவள் என்று திட்டினர். எனது தந்தைக்கு சிறுநீரகம் கொடுத்து கோடிகள் பெற்றுக்கொண்டதாகவும், அதற்காகவே தேர்தல் சீடுகளை வாங்கியதாகவும் குற்றம் சுமத்தினர்.
திருமணமான பெண்களுக்கு ஒரு அறிவுரை—உங்கள் வீட்டில் அண்ணன், தம்பி இருந்தால், உங்கள் தந்தையை காப்பாற்ற நீங்கள் ஓடி வர வேண்டாம். அவர்களையே (அல்லது தேஜஸ்வியின் நண்பர் சஞ்சய் யாதவையே) சிறுநீரகம் தானம் செய்யச் சொல்லுங்கள்.
நான் என் கணவர், பிள்ளைகளை கவனிக்காமல், என் தந்தையின் குடும்பத்துக்காகத் தவறான முடிவு எடுத்தேன். கணவரும் அவரது உறவினரும் கூறிய ஆலோசனையைப் புறக்கணித்து, தந்தையை காப்பாற்ற சிறுநீரகம் தந்தேன். அதற்குப் பதிலாக என்னைத் திட்டுகிறார்கள். நான் செய்த தவறை யாரும் செய்ய வேண்டாம். என்னைப்போன்ற மகளாக யாரும் இருக்க வேண்டாம்,” என்று ரோகிணி மனவேதனையுடன் தெரிவித்துள்ளார்.