சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தமிழக ஐஎன்டியுசி மாநில நிர்வாகிகள் தேர்தல் நேற்று நடத்தப்பட்டது. இதில் தலைவராக மு. பன்னீர்செல்வமும், செயலாளர் (செக்ரட்ரி ஜெனரல்) பதவிக்கு கோவை செல்வமும் வெற்றி பெற்றனர்.
கடந்த காலத்தில், ஐஎன்டியுசி சட்ட விதிகளின்படி தேர்தலை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியன் மற்றும் முகமது ஷஃபி ஆகியோரின் அமர்வு உத்தரவிட்டது. இதனை அடுத்து அக்டோபர் 31 அன்று அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் நவம்பர் 16-ஆம் தேதி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.
தேர்தல் தொடர்பான மனுதாக்கல், சரிபார்ப்பு உள்ளிட்ட செயல்முறைகள் நிறைவு பெற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆனால் மற்றொரு குழு மதுரையில் நவம்பர் 15-ஆம் தேதி தனியே தேர்தல் நடத்தப் போவதாக அறிவித்தது. இதன் மீது எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அந்த போட்டித் தேர்தலுக்கு தடை விதிக்கப்பட்டது. அதேசமயம் செங்கல்பட்டில் 16-ஆம் தேதி நடைபெறும் தேர்தலுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி திருப்போரூர் வடக்கு மாடவீதியில் உள்ள எல்லாம்மாள் திருமண மண்டபத்தில் நேற்று தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் எம்.கே. விஷ்ணு பிரசாத் எம்.பியும், ஓய்வுபெற்ற வருவாய்த் துறை அதிகாரி சோமசுந்தரமும் மேற்பார்வையாளர்களாக இருந்தனர். மூத்த உறுப்பினர்கள் ஏ. கல்யாணராமன், எஸ். லிங்கமூர்த்தி, எம். ஆறுமுகம், எம். நந்தகுமார் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக செயல்பட்டனர்.
மொத்தம் வாக்களிக்க தகுதி பெற்ற 1,810 பேரில் 1,740 பேர் வாக்களித்தனர். வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதில்:
- மு. பன்னீர்செல்வம் – தலைவர் – 1,394 வாக்குகள்
- கோவை செல்வம் – செக்ரட்ரி ஜெனரல் – 1,135 வாக்குகள்
- வாழப்பாடி ராம கர்ணன் – பொருளாளர் – 958 வாக்குகள்
பொதுச் செயலாளர்கள்:
- வெங்கடேஷ் – 296
- லலிதா சுந்தரமகாலிங்கம் – 268
- கருப்பையா – 230
- வழக்கறிஞர் சரவணன் – 224
- ராஜேஸ்வரி – 201
மேலும், செயற்குழு உறுப்பினர்களாக 30 பேர் எதிர்ப்பில்லாமல் தேர்வு செய்யப்பட்டனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு எம்.கே. விஷ்ணுபிரசாத் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தினார்.