“தேனி வெள்ளம் — திமுக அரசால் உருவாக்கப்பட்ட மனிதப் பேரிடர்” : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
தேனியில் ஏற்பட்ட வெள்ளம், திமுக அரசின் அலட்சியத்தால் உருவான மனிதப் பேரிடர் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
“அழகிய தேனி மாவட்டம் இன்று கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மக்கள் அவதியுறும் நிலை மனதை வதைக்கிறது. இது வரலாறு காணாத மழையால் ஏற்பட்டதாக கூறப்பட்டாலும், உண்மையில் இது திமுக அரசின் தவறான நிர்வாகத்தால் ஏற்பட்ட மனிதப் பேரிடரே.
பருவமழை தொடங்குவதற்கு முன்பே கால்வாய்கள் தூர்வாரப்பட்டு, நீர்நிலைகள் சீரமைக்கப்பட்டிருந்தால், இவ்வாறு ஒரு நிலை உருவாகியிருக்குமா? பருவமழையை முன்கூட்டியே கணித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால், இந்தளவு சேதம் ஏற்பட்டிருக்குமா?
மேலும், முல்லைப்பெரியாறு அணையில் 4 நாட்களுக்கு முன்புவரை வெறும் 1,000 கனஅடி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்ட நிலையில், 18ஆம் தேதி இரவு திடீரென 7,163 கனஅடி நீர் திறக்கப்பட்டிருப்பது வெள்ளத்திற்கான காரணமோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.
மொத்தத்தில், திமுக அரசின் அலட்சியத்தால் மக்கள் நள்ளிரவில் தங்கள் வீடுகளை இழந்து, கால்நடைகளை பறிகொடுத்து, வயல்வெளிகள் சேதமடைந்து வாழ்வாதாரமின்றி தவிக்கின்றனர். ஆனால் அரசு மீட்புப் பணிகளில் தாமதமாகவும் மெத்தனமாகவும் செயல்படுகிறது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் உடனடியாக தேனி மாவட்டத்திற்குச் சென்று போர்கால அடிப்படையில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மக்கள் பாதுகாப்பாக தங்கும் முகாம்களை அமைத்து, மீட்புப் பணிகளை விரைவுபடுத்தி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி இழப்பீடு வழங்க வேண்டும்,” என்று அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.