திருப்போரூர் நெம்மேலி பகுதியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக உப்பு தொழிற்சாலை வளாகத்தில் விழுந்து சிதறிய பயிற்சி விமானத்தின் கருப்பு பெட்டி உட்பட பல முக்கிய பாகங்களை விமானப்படை வீரர்கள் மீட்டு தாம்பரம் விமானப்படை தளத்துக்கு அனுப்பினர்.
சென்னை தாம்பரம் விமானப்படை பயிற்சி தளத்திலிருந்து புறப்பட்ட பயிற்சி விமானம், நேற்று முன்தினம் பிற்பகல் திருப்போரூர் அருகே பறந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால், விமானி அவசரமாக பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினார்; சில நிமிடங்களில் விமானம் உப்பு தயாரிப்பு மையம் அமைந்துள்ள புறவழி சாலை அருகே விழுந்து வெடித்தது.
விபத்து நடந்த இடம் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டு, விமானப்படை வீரர்கள் சிதறிய பாகங்களை சேகரிக்கும் பணிகளை தொடங்கினர். தொடர்ச்சியாக 2-வது நாளாக நடைபெற்ற தேடுதலில், 15 அடி ஆழமுள்ள பள்ளத்தில் சேற்றுக்குள் புதைந்திருந்த கருப்பு பெட்டி மற்றும் பல பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
போக்லைன், கிரேன் உள்ளிட்ட கனரக இயந்திர உதவியுடன் காலை 7 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மீட்பு பணி நடைபெற்றது. கருப்பு பெட்டியை பாதுகாப்பாக மீட்ட வீரர்கள், அதை மற்ற பாகங்களுடன் சேர்த்து தாம்பரம் விமானப்படை தளத்திற்கு எடுத்துச்சென்றனர்.
இந்நிலையை செங்கை கோட்டாட்சியர் கணேஷ்குமார், திருப்போரூர் வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விமானப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். கருப்பு பெட்டி அடுத்த கட்ட விசாரணைக்காக டெல்லி உள்ள விமான விபத்து ஆய்வு பிரிவுக்கு அனுப்பப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.