பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 19-ஆம் தேதி கோவை வருகை தருகிறார். இதையொட்டி நகரம் முழுவதும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 3,000-க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். பாதுகாப்பு முன்னேற்பாடு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் கொடிசியா அரங்கில் நேற்று ஆய்வு நடத்தினார்.
தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் நவம்பர் 19 முதல் 21 வரை கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் இயற்கை விவசாயிகள் தேசிய மாநாட்டை பிரதமர் மோடி தொடக்கிவைத்து உரையாற்றுகிறார். மேலும் சிறப்பாக செயல்பட்ட 18 விவசாயிகளுக்கு அவர் விருதுகளை வழங்க உள்ளார். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 50,000-க்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் பங்கேற்க எதிர்பார்க்கப்படுகின்றனர்.
பிரதமர் மோடியின் பயண விவரம்:
- மதியம் 12.30 — புட்டபர்த்தி விமான நிலையத்தில் இருந்து புறப்பு
- 1.25 — கோவை விமான நிலையம் வருகை
- 1.30 — விமான நிலையத்திலிருந்து புறப்பு
- 1.40 — கொடிசியா அரங்கம் சென்றடைவு
- 3.15 — நிகழ்ச்சி முடிந்து புறப்பு
- 3.30 — கோவை விமான நிலையம்
- பின்னர் டெல்லிக்குப் புறப்படுகிறார்
பிரதமர் வருகையை முன்னிட்டு கொடிசியா மைதானம் முழுவதும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. விழா நடைபெறும் வளாகம், பிரதமர் பயணிக்கும் வழித்தடம், பாதுகாப்பு வளையம் உள்ளிட்டவை குறித்து காவல் ஆணையர் ஆ.சரவணசுந்தர் மற்றும் உயர் அதிகாரிகள் விரிவான ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், கோவை விமான நிலையத்தில் போலீஸார் மற்றும் எஸ்பிஜி அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். பிரதமர் வருகையின் காரணமாக, அரங்கு மற்றும் வழித்தடங்களில் மொத்தம் 3,000 போலீஸார் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுவதாக காவல் துறை தெரிவித்துள்ளது