சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கென உருவாக்கப்பட்ட “முதல்வரின் உணவுத் திட்டத்தை” முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். ஆரம்ப கட்டமாக, சென்னை மாநகராட்சியில் 3 ஷிப்ட்களில் பணிபுரியும் 31,373 தூய்மைப் பணியாளர்கள் இத்திட்டத்தின் பயனாளிகளாக இருக்கிறார்கள். வரும் டிசம்பர் 6-ஆம் தேதி முதல் இந்த திட்டம் மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் அமல்படுத்தப்படும் என அவர் அறிவித்தார்.
கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்வில், தூய்மைப் பணியாளர்களுக்கு பல நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. அதன்படி, 1,000 பேருக்கு வீட்டு ஒதுக்கீட்டு ஆணை, 25 குடும்பங்களுக்கு தொழில்முனைவு கடன், புதிய உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 1,260 மாணவர்களுக்கு ரூ.2.82 கோடி மதிப்பிலான கல்வி உதவிகள், தாட்கோவின் சிறப்பு திட்டங்கள் மூலம் 1,000 பேருக்கு ரூ.35 லட்சம், பணியின்போது உயிரிழந்த 2 பணியாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் என பல நல உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் முதல்வர் பேசியதாவது:
சென்னையை தூய்மையாக வைத்திருக்கும் பணியாளர்களின் நலனைப் பாதுகாப்பது அரசின் பொறுப்பு. அவர்களின் பசியை போக்கவும், மரியாதையை காக்கவும் இந்த உணவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சுவையான, ஆரோக்கியமான, சூடான உணவு டிபன்பாக்ஸில், வெப்பக் காப்பு பைகளில் கொண்டு வந்து, அவர்கள் பணியாற்றும் பகுதிகளில் உள்ள நிர்வாகக் கட்டிடங்களில் வழங்கப்படும்.
இந்தத் திட்டம் டிசம்பர் 6-ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
தூய்மைப் பணியாளர்களுக்கான நலத் திட்டங்கள் திமுக ஆட்சியில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டுள்ளன. கருணாநிதி ஆட்சியில் நல வாரியம் உருவாக்கப்பட்டது; தாட்கோ மூலம் வாரிசுகளுக்கு தொழில் பயிற்சி அளிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், தூய்மைப் பணியாளர்களுக்கு ஓய்வறை வசதி இல்லை என்பதால், சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் 300 சதுர அடியில் உடை மாற்றும் அறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய ஓய்வறைகள் உருவாக்கப்படும் என்றார்.
மக்களுக்கு சுயஒழுக்கம் அவசியம்
சென்னை இந்தியாவில் மிகத் தூய்மையான நகரமாகவும், தமிழகமும் தூய்மையான மாநிலமாகவும் அங்கீகரிக்கப்பட மக்களும் பொறுப்பு காட்ட வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கு மதிப்பும், பாதுகாப்பான பணிச்சூழலும் வழங்கப்படும். அரசு தனது கடமையைச் சிறப்பாக செய்வதாகவும், மக்கள் பொது இடங்களை தூய்மையாக வைத்தால் மட்டுமே சமூக முன்னேற்றம் சாத்தியம் என்பதையும் அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பல்வேறு அமைச்சர்கள், மேயர் பிரியா, உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.