தெற்கு ரயில்வே 17 நாட்களில் 85 சரக்கு ரயில்களை இயக்கி சாதனை
சரக்குகளை கையாளும் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில், தெற்கு ரயில்வே பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனின் கோரிக்கைகளுக்கு இணங்க, தெற்கு ரயில்வே தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் உள்ள நேரடி கொள்முதல் மையங்கள் வழியாக வாங்கப்படும் நெல்லை எடுத்து வர சரக்கு ரயில்களை இயக்கியுள்ளது.
தஞ்சை, நாகப்பட்டினம், நீடாமங்கலம், கும்பகோணம், சீர்காழி, மயிலாடுதுறை, பேரளம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், பட்டுக்கோட்டை, விருத்தாச்சலம், செங்கை, புதுக்கோட்டை ஆகிய இடங்களின் கூட்ஸ் ஷெட்டுகளில் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் அக்டோபர் 1 முதல் 17ஆம் தேதி வரை மொத்தம் 85 ரயில்கள் இயக்கப்பட்டு, 2.3 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.
இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டில் 21 சரக்கு ரயில்களும், 2023ஆம் ஆண்டில் 16 சரக்கு ரயில்களும் மட்டுமே இயக்கப்பட்டன. இதன் மூலம் அறுவடை செய்யப்பட்ட நெல்லை ரயில் சேவை மூலம் எடுத்து வருவதில் தெற்கு ரயில்வே மிகச் சிறந்த சேவையை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.