கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 11 மாவட்டங்களில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரிகளுடன் கூடிய மருத்துவமனைகளில் பெரிய அளவில் முறைகேடு ஏற்பட்டதாகக் கூறி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே முடிகொண்டானைச் சேர்ந்த என். ராஜசேகரன் தாக்கல் செய்த மனுவில், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், அரியலூர், நாகப்பட்டினம், விருதுநகர், திருப்பூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு 60% நிதியும், மாநில அரசு 40% நிதியும் வழங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.
மனுதாரர் கூறியதாவது, முன்னாள் முதலவர் மற்றும் அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சரான பழனிசாமி பதவியில் இருந்தபோது இந்தக் கட்டிடங்கள் அமைக்கப்பட்டன. ஆனால், தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகள் மீறப்பட்டு, மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒதுக்கிய கோடிக்கணக்கான நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க 2021 ஜூலை 7 அன்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 2022-ல் தொடரப்பட்ட வழக்கில், புகாருக்கு ஆரம்பகட்ட விசாரணை நடைபெறுவதாக அரசு தெரிவித்ததால், வழக்கு முடிக்கப்பட்டது.
நடப்பு மனுவில், இந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ நேரடியாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. மேலும், 2023-ல் மாநில அரசின் அனுமதி இல்லாமல் சிபிஐ தமிழகத்தில் விசாரணை நடத்தலாம் என்ற அனுமதியை அரசு வாபஸ் பெற்ற அரசாணையும் ரத்து செய்யப்பட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.