தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் திமுக அரசு கிறிஸ்தவர்களுக்காக எந்தச் சிறப்பு நல திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்பதால், அவர்களை நம்பி மீண்டும் ஏமாறக் கூடாது என்று பாஜக கல்வியாளர் பிரிவு மாநிலச் செயலாளர் கல்வாரி N.தியாகராஜன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
“தமிழகத்தில் வாழும் கிறிஸ்தவ மக்களை திமுக அரசு வாக்கு வங்கியாக மட்டுமே கருதி வருகிறது. நான்கு ஆண்டுகளில் அவர்களுக்கென கணிசமான நலத்திட்டம் எதையும் கொண்டு வரவில்லை.
மேலும், சிறுபான்மை நலத்திட்டங்களுக்காக மத்திய அரசு வழங்கிய நிதியையும் தகுந்த முறையில் பயன்படுத்த தவறியுள்ளது. மாநில சிறுபான்மையினர் நல வாரியம் எந்தத் திட்டமும் இல்லாமல் முதலமைச்சர் ஸ்டாலினை மட்டுமே புகழ்ந்து பேசும் நிலையமாக மாறியுள்ளது.
திமுகவும், மாநில சிறுபான்மையினர் நல வாரியமும் இணைந்து, கிறிஸ்தவ மதத் தலைவர்கள்—பேராயர்கள், அருட்தந்தையர்கள், பாஸ்டர்கள், கன்னியாஸ்திரிகள்—மட்டுமின்றி கிறிஸ்தவ சேவைத் துறையில் உள்ள பலரையும் திமுகவின் அரசியல் ஆதரவாளர்களாக மாற்றும் முயற்சியில் உள்ளன.
இந்நிலையில், கிறிஸ்தவ சமூகத்திடம் அரசியல் ஆதரவை பெறுவதற்காக, இந்த ஆண்டில் கிறிஸ்மஸ் விழாவை பல மண்டலங்களாகப் பிரித்து கொண்டாட திமுகவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த விழாக்களின் மூலம் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை மீண்டும் மயக்க முயல்கிறார்கள்.
ஆனால், 2026 தேர்தலில் கிறிஸ்தவர்கள் திமுகவை நம்பி மீண்டும் ஏமாற மாட்டார்கள். குறிப்பாக, கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் இந்த முறை திமுகவுக்கு வாக்களிக்க வாய்ப்பு இல்லை. கிறிஸ்தவ சிறுபான்மையினர் திமுகவையும் அதன் கூட்டணியையும் நம்ப வேண்டாம்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.