பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அனைத்து அரசியல் தரப்பிற்கும் முக்கியமான பாடங்களை வழங்கியுள்ளதாக தமிழக முதலவர் மு.க. ஸ்டாலின் தனது சமூக ஊடக பதிவு மூலம் கருத்து தெரிவித்துள்ளார்.
பிஹாரில் கடந்த 6 மற்றும் 11-ஆம் தேதிகளில் 2 கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், மொத்த 243 சட்டப்பேரவைத் தொகுதிகளில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அவர்கள் 202 இடங்களை கைப்பற்றினர். எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணிக்கு 35 இடங்களே கிடைத்தன.
இந்த முடிவைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் “அனைவருக்கும் பாடங்களை வழங்கிய பிஹார் தேர்தல்” என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டதாவது:
“பெரும் வெற்றியை பெற்றுள்ள மூத்த தலைவர் நிதிஷ் குமார் அவர்களுக்கு நான் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவிக்கிறேன். பிஹார் மக்களின் ஆவலான எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அவர் முன்னெடுக்கும் பணிகளில் வெற்றி பெர வாழ்த்துகிறேன். உருக்கமான பரப்புரை செய்த இளம் தலைவர் தேஜஸ்வி யாதவுக்கும் எனது பாராட்டுகள்.”
அதனைத் தொடர்ந்து அவர் கூறியதாவது:
- நலத்திட்டங்கள் மக்களிடம் செல்வது,
- சமூக மற்றும் கொள்கை அடிப்படையிலான கூட்டணிகள்,
- அரசியல் செய்தியை மக்கள் மனதில் தெளிவாகப் பதியச் சொல்லும் திறன்,
- இறுதி வரை முழு அர்ப்பணிப்புடன் தேர்தல் பணியில் ஈடுபடுவது
இவையெல்லாம் தேர்தல் முடிவுகள் மூலம் தெளிவாக வலியுறுத்தப்படுகின்றன என அவர் தெரிவித்தார்.
மேலும், இண்டியா கூட்டணியின் அனுபவமிக்க தலைவர்கள் இந்தச் செய்தியை உணர்ந்து, எதிர்காலச் சவால்களுக்கான திட்டங்களை அமைக்க முடியும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
அதேசமயம், இந்தத் தேர்தல் முடிவுகள் தேர்தல் ஆணையத்தின் தவறுகள் அல்லது பொறுப்பின்மைமுறைகளை மறைக்காது என்றும், தேர்தல் ஆணையத்தின் மீது மக்களிடத்தில் இருந்த மரியாதை மிகக் குறைந்துவிட்டது என்றும் ஸ்டாலின் விமர்சித்தார்.
“வலுவான மற்றும் முழுமையான நடுநிலையுடன் செயல்படும் தேர்தல் ஆணையம் என்பது நாட்டின் மக்களின் அடிப்படை உரிமை. தேர்தலில் வெற்றி பெறாதவர்களுக்கும் நம்பிக்கை தரும் வகையில் நியாயமான தேர்தல் முறையை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.” என அவர் பதிவை முடித்துள்ளார்.