பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் ‘டியூட்’ திரைப்படம் 2 நாட்களில் ரூ.45 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘டியூட்’. சரத்குமார், ரோகிணி, ‘பரிதாபங்கள்’ டிராவிட் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ளார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார்; சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ஆம் தேதி இப்படம் வெளியாகியது.
தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் இப்படம், முதல் நாள் உலகம் முழுவதும் ரூ.22 கோடி வசூலித்தது. இதனைத் தொடர்ந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘டியூட்’ திரைப்படம் இரண்டு நாட்களில் ரூ.45 கோடி வசூலித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால், ஓரிரு நாட்களில் இப்படம் ரூ.100 கோடியை தாண்டிவிடும் என கூறப்படுகிறது.
இந்த வெற்றி குறித்து பிரதீப் ரங்கநாதன் கூறியதாவது:
“தெலுங்கில் ‘டியூட்’ திரைப்படம் ‘டிராகன்’ படத்தை விட 4-5 மடங்கு அதிகமாக வசூல் செய்து வருகிறது. தமிழிலும் ‘டிராகன்’ படத்தை விட முதல் நாள் வசூல் அதிகமாக இருக்கிறது. இந்த வசூலை விட மக்கள் ரசித்து வருவதே எனக்கு முக்கியம். திரையரங்குகளில் பல காட்சிகளுக்கு பார்வையாளர்கள் சிரிப்பதையும், கத்துவதையும் பார்க்க முடிகிறது,” என்று தெரிவித்துள்ளார்.