எஸ்.ஐ.ஆர் படிவத்தில் பல சந்தேகங்கள் இருப்பதால், அவற்றை தேர்தல் அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
“நான் ரியல் எஸ்டேட் மற்றும் விவசாய தொழில் செய்வதில் என்ன குறை? நான் யாரையும் மிரட்டி பணம் பறிக்கவில்லை. என் குடும்பத்தைக் காப்பாற்ற தொழில் செய்ய வேண்டும். என்னால் எந்த தொழிலும் செய்யக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது; நான் இன்னும் பல தொழில்கள் தொடங்குவேன். அரசியலும் செய்கிறேன், 24 மணி நேரமும் உழைக்கிறேன். மற்றவர்களும் சோம்பேறித்தனமாக இல்லாமல் உழைக்க வேண்டும்,” என்றார்.
அவர் தொடர்ந்து கூறினார்:
“ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்கள் இன்று தலைமுறைகளுக்கு சொத்துச் சேர்த்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் என்ன தொழில் செய்கிறார்? அவருக்கு பணம் எங்கிருந்து வருகிறது? மாநிலத்தில் கஞ்சா பிரச்சினை அதிகரித்துள்ளது; குற்றவாளிகள் மீண்டும் குற்றம் செய்கிறார்கள். கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான இடத்தில் 40 ஆண்டுகளாக பிரச்சினை இருந்தும் போலீஸ் ரோந்து இல்லை. அவர்கள் தங்கள் தவறுகளைச் சீர்செய்ய வேண்டும்,” என்றார்.
வாக்காளர் பட்டியல் தொடர்பாக அவர் கூறினார்:
“வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளை சரி செய்யவே தீவிர திருத்தப் பணி நடக்கிறது. முன்பும் பல முறை எஸ்.ஐ.ஆர் நடைபெற்றுள்ளது. தற்போதைய எஸ்.ஐ.ஆர் படிவத்திலும் பல சந்தேகங்கள் உள்ளன; அவற்றை சரி செய்வது தேர்தல் அதிகாரிகளின் கடமை,” என்றார்.
டெல்லியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து:
“செங்கோட்டை அருகே 13 பேர் உயிரிழந்தது மிகக் கொடூரமான பயங்கரவாத தாக்குதல். 2006 மும்பை தாக்குதலைப் போல் இது நடந்துள்ளது. இது ஆபத்தான நிலை. அரசியல் வாதங்களைத் தாண்டி அனைவரும் இதை கண்டிக்க வேண்டும். நாட்டுக்குள் பயங்கரவாத எண்ணம் பரவுவது மிக ஆபத்து,” என்று அவர் எச்சரித்தார்.
தமிழகத்தில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் மேலும் கூறினார்:
“தமிழக டிஎன்எஸ்யூ சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் கோவை, சேலம் பகுதிகளில் ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கு முதல்வர் தனி கவனம் செலுத்தி, தனி கண்காணிப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். தமிழகத்தின் நிலை கவலைக்கிடம்,” என்றார்.