‘காந்தா’ படத்துக்கு எதிரான வழக்கிற்கு ராணா பதிலடி
நவம்பர் 14 அன்று வெளியாக உள்ள துல்கர் சல்மான் – ராணா நடிப்பில் உருவான ‘காந்தா’ திரைப்படத்திற்கு எதிராக தடைக்கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த படம், தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே. தியாகராஜ பாகவதர் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு நீதிமன்றம் நவம்பர் 18க்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டது.
இந்நிலையில், படத்தில் நடித்ததுடன், துல்கர் சல்மானுடன் இணைந்து தயாரித்துள்ள ராணா, எக்ஸ் தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
ஒரு ரசிகர்,
“‘காந்தா’ படத்திற்கு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதைப்பற்றி உங்கள் கருத்து?”
என கேள்வி எழுப்பினார்.
அதற்கு ராணா பதிலளித்ததில்,
“அந்த வழக்கு ஆதாரமற்றது. இப்படத்தில் எவ்வித உண்மையான வாழ்க்கை சம்பவங்களும் இல்லை. நவம்பர் 14 அன்று திரையரங்கில் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.”
என்று தெரிவித்தார்.
இந்த பதில் மூலம், ‘காந்தா’ திரைப்படம் எம்.கே. தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது அல்ல என்பதை ராணா நேரடியாக உறுதி செய்துள்ளார்.
இதற்கிடையில், படம் சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டதில் நல்ல பாராட்டுகள் கிடைத்துள்ளன. இதனால் படத்தின் டிக்கெட் முன்பதிவு வேகமாக அதிகரித்து வருகிறது.