“டெல்டா மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காத முதல்வர்” – பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் குற்றச்சாட்டு
டெல்டா பகுதி விவசாயிகள் கடும் பாதிப்பை எதிர்நோக்கும் நிலையில், தன்னை ‘டெல்டாகாரன்’ என பெருமையாகச் சொல்லிக் கொள்கிற முதல்வர் மு.க. ஸ்டாலின், அந்தப் பகுதி மக்களைப் பாதுகாக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் குற்றம் சாட்டியுள்ளார்.
நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
“அனைவரும் தீபாவளிப் பண்டிகையை கொண்டாட தயாராக உள்ள நிலையில், டெல்டா மாவட்ட விவசாயிகள் மட்டும் அந்த மகிழ்ச்சியில் பங்கெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசு கொள்முதல் மையங்கள் போதிய அளவில் இல்லை. வழக்கத்தைவிட மூன்றில் ஒரு பங்கு மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் விளைவித்த நெல் மழையில் நனைந்து, முளைத்து சேதமடைந்துள்ளது.
குறுவை சாகுபடி செய்த விவசாயிகளின் வாழ்க்கை இப்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது. அவர்கள் உற்பத்தி செய்த நெல்லை விற்க முடியாத நிலை மிக மோசமானது. இதை சரி செய்ய தமிழக அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நாகை, தஞ்சை, திருவாரூர் பகுதிகளில் விவசாயிகள் பல இன்னல்களை எதிர்கொள்கின்றனர். இதற்குக் காரணம், தமிழக அரசின் அக்கறையின்மையும் மெத்தனமான போக்கும் தான். வீண் விளம்பரத்துக்காக கோடிக்கணக்கில் செலவு செய்யும் திமுக அரசு, விவசாயிகளுக்குத் தேவையான கொள்முதல் மையங்கள், சேமிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையங்களை அமைக்கவில்லை. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தன்னை ‘டெல்டாகாரன்’ என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார். ஆனால், டெல்டா விவசாயிகள் மற்றும் பொதுமக்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்காதவர், தமிழக மக்களை எப்படி பாதுகாப்பார்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இந்தக் கருத்துகள் தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.