“வெளியூர் மாநிலங்களில் இருந்து வரும் போலி வாக்காளர்களை பயன்படுத்தி திமுகவின் வெற்றியை பறிக்கலாம் என கனவு காணும் அதிமுக கூட்டணிக்கு, வரும் 2026 தேர்தலில் மக்கள் உரிய பதிலளிப்பார்கள்” என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
திருவிடைமருதூர் தொகுதியின் திருநறையூரில் உள்ள மங்கள சனீஸ்வரன் திருக்கோயில் வளாகத்தில் 400-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் அமைச்சர். பின்னர் அவர் ஊடகங்களிடம் கூறியதாவது:
“அறநிலையத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். பிஹார் தேர்தலின் போது எஸ்ஐஆர் காரணமாக ஏற்பட்ட குழப்பத்தைப் பயன்படுத்தி, தோல்வி நெருங்கிக் கொண்டிருக்கும் மத்திய பாஜக அரசு இங்கு கள்ள வாக்குகளை சேர்த்து தேர்தலில் ஆதிக்கம் செலுத்தலாம் என முயற்சி செய்கிறது.
வாக்காளர் பட்டியலில் இருந்து சிறுபான்மையினரை நீக்குவதன் மூலம் முதல்வருக்கான பெரிய ஆதரவை குறைக்கலாம் என்ற நோக்கத்துடன் எஸ்ஐஆர் பெயரில் பாஜக அரசு, தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் சதி திட்டம் தீட்டுகிறது. அதை அடிமைத்தனமாக அதிமுக ஏற்றுக்கொள்கிறது.
தகுதியான வாக்காளர்கள் மட்டும் சேர்க்கப்பட வேண்டும்; ஆனால் வெளிமாநிலத்தில் இருந்து போலி வாக்காளர்களை கொண்டு வந்து திமுகவின் வெற்றியை களவாடலாம் என்று நினைக்கும் அதிமுக கூட்டணிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நவம்பர் 12-ஆம் தேதி தனது எக்ஸ் பதிவில், தனியார் பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு ஆதரவு அளிக்கிறது என்றும் குற்றம் சாட்டினார். ஆனால், உயர்கல்வித் துறையின் பரிந்துரைகளின் பேரில் அதற்கான சட்ட முன்வடிவை நாம் ஏற்கனவே திரும்பப் பெற்றுள்ளோம். இந்த தகவலை அறிவிருந்தும், ‘திரும்பப் பெற வேண்டும்’ என்ற கோரிக்கை நியாயமற்றது என்பதை மக்கள் நன்கு புரிந்து கொள்வார்கள்.
சமூக நீதி மற்றும் உயர்கல்வி வளர்ச்சியில் அவதானமாக செயல்படும் திராவிட மாடல் அரசு கொள்கையில் எந்தவித சமரசத்தையும் செய்யாது. திரும்பப் பெற்ற தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட முன்வடிவு அதே நிலையில் தொடரும்; அதில் எந்த மாற்றமும் இல்லை.”
இந்த நிகழ்வில் முன்னாள் எம்.பி. ராமலிங்கம், அறநிலையத் துறை உதவி ஆணையர் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் பிரபாகரன், ஆய்வாளர் சுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.